*இந்து முன்னணி செயலாளர் உள்பட 3 பேர் கைது
கிணத்துக்கடவு : நெகமம் அருகே கை, கால்களை கட்டி போட்டு சிறுவனை இரும்பு பைப்பால் தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை அடுத்த நெகமத்தை சேர்ந்தவர் தனபால். கறிக்கடை உரிமையாளர். இவரது கடையில் வட மாநிலத்தை சேர்ந்த ரோகித் (17) வேலை செய்து வருகிறார். இவர், அங்குள்ள தர்சன் என்பவரின் ஓட்டலில், ரூ.10 ஆயிரம் திருடிவிட்டதாக, தர்சன் தனது சித்தப்பாவும், இந்து முன்னணி நகர செயலாளருமான கணேசனிடம் கூறியுள்ளார்.
இதே கேட்டு ஆவேசம் அடைந்த கணேசன், உணவகத்தில் பணியாற்றும் சமையல் மாஸ்டர் ஓம்பிரகாஷ் என்பவரை அழைத்துக்கொண்டு, கறிக்கடையில் இருந்த ரோகித்தை பிடித்து கை, கால்களை கட்டி போட்டு, இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கியபடி ரோட்டில் தரதரவென இழுத்து சென்றுள்ளார்.இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து வாட்ஸ்-ஆப்பில் வைரல் ஆக்கினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார், உணவக உரிமையாளர் தர்சன் (21), இந்து முன்னணி நகர செயலாளர் கணேசன், உணவக சமையல் மாஸ்டர் ஓம்பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரும்பு பைப்பால் தாக்கப்பட்ட ரோகித், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.