*நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு டீன் பாராட்டு
நெல்லை : எட்டு வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பம்பர ஆணியை நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நவீன கருவி மூலம் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றினர்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தை சேர்ந்த மைதீன்-தாஹாபீவி தம்பதியின் மகன் முகமது ஆரிப்(8). அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன் விளையாடிய போது பம்பர ஆணி ஒன்றை விழுங்கி விட்டான். அது அவனது இடது மூச்சுக் குழாயில் சிக்கியது.
இதனால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டான். இதையறிந்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவனை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு காது, மூக்கு, தொண்டை துறை மருத்துவ நிபுணர்கள் நவீன சிகிச்சை மூலம் பம்பர ஆணியை அகற்றினர்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் ஆலோசனை படி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கண்காணிப்பில் காது, மூக்கு, தொண்டை துறை பிரிவு தலைவர் ரவிக்குமார் தலைமையில் டாக்டர்கள் ராஜ்கமல் பாண்டியன், பிரியதர்ஷினி, முத்தமிழ் சிலம்பு, மயக்கவியல் துறை தலைவர் சீனிவாசன், டாக்டர் தயூப் கான், அபிராமி ஆகியோர் இந்த சிகிச்சையை 30 நிமிடங்கள் மேற்கொண்டு வெற்றிகரமாக சாதனை படைத்தனர். மருத்துவ குழுவினரை டாக்டர் டீன் ரேவதி பாலன் பாராட்டினார்.
ரிஜிட்பிராஞ்ஜோஸ்கோபி
இதுகுறித்து காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு டாக்டர் ரவிகுமார் கூறியதாவது, சிறுவன் ஆரிப் விழுங்கிய ஆணி இடது மூச்சுக்குழாய் வழியாக சென்று நுரையீரல் பகுதியில் சிக்கி இருந்தது ரிஜிட்பிராஞ்ஜோஸ்கோபி என்ற நவீன கருவி மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கருவி மூலம் சிறுவனின் நுரையீரல் பகுதியில் சிக்கி இருந்த ஆணியை அகற்றியபோது சிறுவன் மூச்சு விடுவதற்காக ஆக்ஸிஜனை குறிப்பிட்ட அளவு கொடுத்து அடுத்த 20 வினாடி இடைவெளியில் ஆணி எடுக்கப்பட்டது என்றார்.
சிறுவன் ஆணியை விழுங்கியது எப்படி?
சிறுவன் ஆரிப் பம்பரத்தை வைத்து விளையாடிய போது அதன் மேல் இருந்த ஆணியை சரியாக பொருத்துவதற்காக பல்லால் கடித்து இழுத்துள்ளான். அதிக அழுத்தம் கொடுத்து கடித்து இழுத்த போது எதிர்பாராத விதமாக பம்பரத்தில் இருந்த ஆணி உருவி தொண்டை வழியாக மூச்சுக்குழாயில் நுழைந்து நுரையீரல் பகுதிக்கு சென்றது. இதனால் சிறுவன் பேச முடியாமலும், மூச்சு விட முடியாமலும் திணறினான்.
இதையடுத்து பெற்றோர் சிறுவனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு நவீன சிகிச்சை மூலம் டாக்டர்கள் சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஆணியை அகற்றினர்.