மும்பை : “ஐ லவ் யூ” என கூறுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று தீர்ப்பளித்துள்ள நாக்பூர் நீதிமன்றம், போக்சோ வழக்கில் கீழ் நீதிமன்றம் இளைஞருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்துள்ளது. 2015ம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் பள்ளி மாணவி ஒருவரை வழிமறித்த இளைஞர், அவரை காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் புகாரை அடுத்து, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றம் 2017ம் ஆண்டில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நாக்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஊர்மிளா ஜோஷி, இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார். “ஐ லவ் யூ” என்று தனது உணர்வை வெளிப்படுத்தியதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என நீதிபதி கூறியுள்ளார். “ஐ லவ் யூ” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது என்பதால் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்வதாக நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.