நெல்லை: நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் ஞாயிறு தோறும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் இயக்கம் இம்மாதத்தோடு நிறைவுறும் நிலையில், வரும் நவம்பர் மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06012) வரும் செப்டம்பர் 1,8,15,22,29 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 6,13,20,27 ஆகிய தேதிகளிலும், நவம்பர் 3,10,17,24 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது. இந்த தேதிகளில் ஞாயிற்றுகிழமை தோறும் நாகர்கோவிலில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 11.15 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.
மறுமார்க்கமாக தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்(எண்.06011) செப்டம்பர் மாதம் 2,9,16,23,30 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 7,14,21,28 ஆகிய தேதிகளிலும், நவம்பர் மாதம் 4,11,18,25 ஆகிய தேதிகளிலும் தாம்பரத்தில் இருந்து திங்கள் கிழமை தோறும் பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்த சிறப்பு ரயிலானது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளில் ஞாயிற்று கிழமைகளில் நகரங்களுக்கு திரும்புவோருக்கு இந்த ரயில் வசதியாக இருப்பதால், தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.