நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 என 4 பிளாட்பாரங்கள் உள்ளன. நாள் தோறும் 30க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் வந்து செல்கின்றன. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் மிக முக்கியமான ரயில் நிலையமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் விளங்கி வருகிறது.
நாடு முழுவதும் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலும் ரூ.25.78 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடக்க இருக்கின்றன. இந்த மறுசீரமைப்பு பணியில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் புதிய வடிவமைப்புடன் நவீனப்படுத்தப்பட உள்ளதாக கூறினர்.
அலங்கார வளைவுகள், நவீன பார்க்கிங் வசதிகள், இயற்கை புல்வெளியுடன் அலங்கார தோட்டத்துடன் கூடிய ரவுண்டானா, செல்பி பாயிண்ட், பஸ் நிறுத்தங்கள், கூடுதல் எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதிகள், பயணிகள் தங்கும் அறைகள், ரயில் நிலையத்தில் ஓய்வு அறைகள், தபால் நிலையம், காவல் நிலைய கட்டிங்கள், ஸ்டேஷன் மாஸ்டர் அறைகள், கேண்டீன்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட மொத்தம் 14 பணிகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் தற்போது பார்க்கிங் அமைக்கும் பணிகள் நடக்கிறது.
இந்த பணிகளுக்கு இடையே கூடுதல் பிளாட்பாரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. 4 பிளாட்பாரங்கள் மட்டுமே இருப்பதால், மேலும் 2 புதிய பிளாட்பாரங்கள் அமைக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கினர். இந்த பணிகள் நிறைவடைந்தால், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து விடும். ஏற்கனவே ரயில்கள் பராமரிப்பு வசதிக்காக 2 பிட் லைன்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 5 பிட்லைன்கள் உள்ளன. நாகர்கோவில் – திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணி முடிவடைந்துள்ளது. நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதை பணியும் முடிவடைந்து இருக்கிறது. இவ்வாறு கூடுதல் பிட்லைன்கள், கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்படுவதால் தென் மாவட்ட மக்கள் பயன்ெபறும் வகையில், கன்னியாகுமரி அல்லது நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
தாம்பரம் – ஐதராபாத் இடையிலான சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் – சென்னை பகல் நேர வந்தே பாரத், கன்னியாகுமரி – சென்னை இரவு நேர வந்தே பாரத், நாகர்கோவில் – தாம்பரம் ரயில் தினசரி ரயிலாக மாற்றம், திருவனந்தபுரம் – மங்களூரு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குமரி மாவட்ட மக்கள் வலியுறுத்தி வரும், நிலையில் கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி தற்போது கிடப்பில் உள்ளது. கூடுதல் பிளாட்பாரத்துக்காக தண்டவாளங்களை மாற்றும் பணிகள் தொடங்கின. ஆனால் அதன் பின்னர் அப்படியே பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயரழுத்த மின் கோபுரங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இந்த பணிகளுக்காக கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அதிக வருவாயை ஈட்டினாலும் அடிப்படை வசதிகள் இல்லை. 4, 5 நடைமேடை பணிகள் வேகமாக தொடங்கிய நிலையில் தற்போது மந்த கதியில் நடக்கிறது. 6மாதங்களை கடந்த பின்னரும் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.
இதே போல் 9 ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்க நிலம் சமன்படுத்தும் பணியும் பாதியில் நிற்கிறது. எனவே பாதியில் நிற்கும் ரயில்வே முனைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ரயில்வே மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.