நாகர்கோவில்: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜ தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று முன் தினம் இரவு களியக்காவிளையில் இருந்து, நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். நாகர்கோவில் பால்பண்ணை ரோட்டில் கார் வந்த போது, விபத்தை தடுக்க பேரிகார்டு இருந்ததால் டிரைவர் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் காரில் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சாலையின் நடுவில் விழுந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் சுற்றுலா பஸ், அந்த நபர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் தென்காசியை சேர்ந்த கணேசன் (36) என்பதும், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கோழிப்பண்ணையில் வேலை செய்வதும், படுகாயமடைந்தவர் நாகர்கோவில் இருளப்பபுரம் ராஜ்குமார் (44) என்றும் தெரிய வந்துள்ளது.