நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. புகை மண்டலம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நாகர்கோவில் வலம்புரிவிளையில் மாநகராட்சிக்கு குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தற்போது பயோ மைனிங் முறையில் மாற்றும் பணிகள் நடக்கின்றன. 3 இயந்திரங்கள் மூலம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன.
மக்காத குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகின்றன. மலைபோல் குவிந்துள்ள குப்பையில், அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. 1 வாரம் வரை போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்தநிலையில் இன்று காலையிலும் மீண்டும் குப்பை கிடங்கில் தீ பிடித்தது. இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில் உதவி கோட்ட அலுவலர் துரை மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. குப்பைகளை பொக்லைன் மூலம் கிளறி தான் தீயை அணைக்க வேண்டும் என்பதால், தீயணைப்பு வீரர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.