நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் பகலில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் படுத்துக் கொண்டு உளறிக் கொண்டிருந்தார். மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தூய்மை பணியில் இருந்த போது அவர்களை ஆபாசமாக திட்டி தகராறு செய்தார். அங்கிருந்த வியாபாரிகள் கண்டித்த போது, திடீரென தனது மேலாடையை கழற்றி பரபரப்பை உண்டாக்கினார். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், நாகர்கோவிலில் உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றில் பணியாற்றியதாகவும், தனக்கு சம்பளம் தராமல் விரட்டி விட்டு, கணவரை சிறை வைத்திருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து அவரது கணவர் வரவழைக்கப்பட்டார். பின்னர் ஆட்டோவில் ஏற்றி, ஓட்டலுக்கு செல்லுமாறு இளம்பெண்ணை அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட தொடங்கினார். பயணிகள் சிலரை அடிக்கவும் பாய்ந்தார். தன் நிலை மறந்திருந்த அந்த இளம்பெண்ணின் நிலை குறித்து, வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வடசேரி சப் இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையில் பெண் அதிரடிப்படை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடமும் தகராறு செய்த பெண், பெண் போலீசாரை ஆபாசமாக திட்டினார். ஆனாலும் பெண் போலீசார் பொறுமையாக இளம்பெண்ணை கையாண்டனர்.
பஸ் நிலையத்தில் இருந்து நைசாக பேசி இரவு 9 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தங்களை ஆபாசமாக திட்டியதை கூட மறந்து விட்டு அந்த பெண்ணுக்கு உணவு மற்றும் டீ வாங்கி கொடுத்தனர். பின்னர் அவர் செல்ல வேண்டிய திருவனந்தபுரத்துக்கு டிக்கெட் எடுத்து பிளாட்பாரத்துக்குள் அழைத்து சென்றனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் ஏறுமாறு கூறினர். ஆனால் ரயிலில் ஏற மறுத்து பிளாட்பாரத்தில் படுத்து இளம்பெண் ரகளை செய்தார். பெண் போலீசை எட்டியும் உதைத்தார். ஆனாலும் பொறுமை காத்த போலீசார், அவரிடம் நைசாக பேசி கடைசி நேரத்தில் ரயில் ஏற்றி அனுப்பினர். மாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் 6 மணி நேரம் பெண் போலீசை பாடாய் படுத்திய பெண்ணிடம் மிகவும் பொறுமையுடன் நடந்து கொண்டு பத்திரமாக அனுப்பி வைத்த சப் இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் பெண்கள் அதிரடிப்படை போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.