நாகர்கோவில்: நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில், சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நாட்டின் 76 வது சுதந்திர தினம் வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடக்கின்றன. மாவட்ட கலெக்டர் தர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். நிகழ்ச்சியில் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது சுதந்திர விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
150 போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். பள்ளிகளில் மாணவ, மாணவிகளும் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அண்ணா விளையாட்டு அரங்கமும் சீரமைக்கப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. கடலோர பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.