நாகர்கோவில் : நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் 2 முக்கிய சாலைகள் பரீட்சார்த்த முறையில் இரு வழிப்பாதையாக மாற்றி சோதனை நடந்து வருகிறது. இந்த திட்டம் பலன் அளித்தால், நிரந்தரமாக அமல்படுத்தப்படும் என போலீசார் கூறினர். நாகர்கோவிலில் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெருக்கடி தீராத தலை வலியாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் காவல்துறையினர் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் டிராபிக் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் ஒரு சில மாற்று வழிகளை கையாண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நாகர்கோவிலில் முக்கியமான சந்திப்பு பகுதிகள் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. செட்டிக்குளம் சந்திப்பு முதல் சவேரியார் கோயில் சந்திப்பு வரையிலான சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சென்று வந்தாலும் கூட கனரக வாகனம் செல்ல முடியாது.
கலெக்டர் அலுவலக சாலை, ராமன்புதூர் ரோடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கன்னியாகுமரிக்கு செல்ல பொதுப்பணித்துறை அலுவலக சாலை வழியாக வேப்பமூடு சந்திப்பு சென்று, பின்னர் அங்கிருந்து அண்ணா பஸ் நிலையம், கோட்டார் காவல் நிலைய சந்திப்பு, சவேரியார் கோயில் சந்திப்பு வழியாக ஈத்தாமொழி விலக்கு சென்று அங்கிருந்து கன்னியாகுமரி செல்ல வேண்டும்.
இதனால் சுமார் 2.5 கி.மீ. தூரம் அதிகம் ஆகிறது. இதனால் கம்பளம் ரோடு, கோட்டார் ஆயுர்வேத கல்லூரி அருகில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய செட்டிக்குளம் சந்திப்பு முதல் சவேரியார் கோயில் சந்திப்பு வரையிலான சாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக சந்திப்பு, ராமன்புதூரில் இருந்து வரும் வாகனங்கள் இனி செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து நேராக சவேரியார் கோயில் சந்திப்பு செல்லலாம். பீச் ரோடு சந்திப்புக்கும் செல்ல முடியும்.
இதே போல் வேப்பமூடு சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் சந்திப்பு சாலையும் ஒரு வழிப்பாதையாக இருந்தது. தற்போது இந்த சாலையும் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் சென்றால் இந்த மாற்றம் நிரந்தரமாக்கப்படும் என போலீசார் கூறினர்.