சென்னை: சமூகநீதி சத்திரியர் பேரவை சார்பில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு காந்தியடிகளுக்கு ஊக்கமளித்த மயிலாடுதுறை நாகப்பபடையாட்சியாரின் நினைவு நாள் பேரணி மற்றும் கூட்டம் நடந்தது. விழாவிற்கு கொள்கைப்பரப்புச் செயலாளர் ஜெகமுருகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இ.செல்வராஜ், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்.கலியமூர்த்தி, வன்னியர் மேம்பாட்டு இயக்கத் தலைவர் லோகசம்பத், நாகப்படையாட்சி இளைஞர் மன்ற நிர்வாகி ஜெ.ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவீரன் குரு வன்னியர் சங்கம் செயலாளர் இரா.சங்கர் வரவேற்று பேசினார். டிகேடிஎம்எஸின் மாவட்டத் தலைவர் பா.அல்போன்சா, மாநிலத் துணைத் தலைவர எஸ்.ஆனந்தஜோதி, அமைப்புசாரா மாவட்டத் தலைவர் கே.மஞ்சுளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் நாகப்பபடையாட்சியார் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பொன்குமார் அளித்த பேட்டியில், “நாகப்பபடையாட்சி நினைவைப் போற்றும் வகையில் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ் பார்க் நகரத்தில் அவருக்கு நினைவு மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்திற்கும் சொந்தக்காரரான நாகப்பபடையாட்சியாரின் தியாகமும், வரலாறும் உரிய முறையில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே நாகப்பபடையாட்சியாரின் தியாகத்தையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும் வகையிலும், அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையிலும் அரசின் பள்ளி பாடப் புத்தகத்தில் அவரின் தியாக வரலாறு இடம்பெற்றிட உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திட வேண்டும். நாகப்பபடையாட்சியாருக்கு மயிலாடுதுறையில் முழு உருவ வெண்கல சிலையை தமிழக அரசு அமைத்திட வேண்டும். மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு நாகப்பபடையாட்சியார் பெயர் சூட்டிட வேண்டும்” என்றார்.