கீழ்வேளூர்: நாகப்பட்டினம் அருகே சிவன் கோயில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 அடி உயர சனீஸ்வரர் சிலை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த புதுச்சேரி சிவன் கோவில் தெற்கு வீதியில் இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான நடேஸ்வரசாமி கோயில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான திருவாசல்குளத்தில் நேற்று மீன் பிடிப்பதற்காக தண்ணீரை பொதுமக்கள் இறைத்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் படித்துறையில் இறங்கியபோது குளத்தில் சுவாமி சிலை கிடந்தது.
இதுதொடர்பாக விஏஓ கவுரிக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய் ஆய்வாளர் ஹாஜிரா பானு, விஏஓ கவுரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், 2 அடி உயரமுள்ள சனீஸ்வரர் கற்சிலை என தெரிய வந்தது. இதனையடுத்து சிலை நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தாசில்தார் தனஞ்செயனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, குளத்தில் சிலையை வீசி சென்றவர்கள் யார் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.