Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது: கோடியக்கரையில் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. கோடியக்கரையில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு, விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கனமழையாக மாறியது. நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் மழை நீர் வடிய வழியில்லாமல் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையின் காரணமாக பகல் நேரமே இரவு போல் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கி சென்றனர். நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என பெற்றோர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனால் தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பள்ளிகள் விடுமுறை இல்லை என நினைத்து மாணவ, மாணவிகள் குடை பிடித்து கொண்டும், தங்களது பெற்றோர்கள் உதவியுடன் வாகனங்களிலும் பள்ளிகளுக்கு சென்றனர். ஒரு சில பள்ளிகள் திடீரென விடுமுறை விடப்படுவதாக அறிவித்த காரணத்தால் வேறு வழியின்றி மழையில் நனைத்தபடி வீட்டிற்கு திரும்பினர். ஆட்டோக்களில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திடீரென விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் நீண்ட நேரம் பள்ளி வளாகத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் விடாமல் மழை பெய்வதால் பின்பட்ட குறுவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் வயல்களில் மழைநீர் சூழ்ந்ததால் 2 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள் பயிர்கள் மூழ்கியது. குறிப்பாக மீனம்பநல்லூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பின்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா பயிர்களை மழை நீர் சூழ்ந்தது. வயல்களில் தேங்கிய நீரை வடியவைக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மழை பாதிப்பு குறித்த தகவல்களை அறிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறையை திறந்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, கருப்பம்புலம் ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், செம்போடை, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவில் மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் வேதாரண்யம் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து காலை 8 மணி முதல் 5மணி நேரமாக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள்5000 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரமாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் ஏரி, குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன.

நேற்று அதிகபட்சமாக கோடியக்கரையில் நான்கு மணி நேரத்தில் 14 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 30 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. வேதாரண்யம் 15செ.மீ, தலைஞாயிறு 12செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வாசல் தென்பாதி, குலமங்கலம், தான்தோனி, ஒக்கநாடு மேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நடவுகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது பெய்து வரும் மழையால் முழுமையாக மூழ்கியுள்ளது. நெய்வாசல் தென்பாதி, குலமங்கலம், தான் தோணி, ஒக்கநாடு மேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.