நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீரென 3வது தளத்தில் இருந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் பொருட்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கனிம வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் அவசர, அவசரமாக படிக்கட்டுகள் வழியாக வெளியேறினர். இதையடுத்து தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்று வந்த கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், அனைத்து தளங்களிலும் பணியாற்றும் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். பொதுமக்களையும் உடனே அலுவலகத்தை விட்டு வெளியேறும்படி கூறினார். தகவல் அறிந்து வந்த நாகப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் 500க்கும் மேற்பட்ட செட்ஆப் பாக்ஸ்கள் எரிந்து நாசமானது. பின்னர், பொதுமக்கள் மனு அளிக்க அருகில் இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மனுக்களை பெற்றார்.