நாகப்பட்டினம்,நவ.15: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் இணை இயக்குநர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் நாற்று விடுதல், நடவுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இத்தருணத்தில் தற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்திற்கு தேவையான யூரியா 1718 மெட்ரிக்டன், டிஏபி 736 மெட்ரிக்டன், பொட்டாஷ் 301 மெட்ரிக்டன், காம்ப்ளக்ஸ் 665 மெட்ரிக்டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடப்பு மாதத்திற்கு தேவையான மீதியுள்ள உரங்களும் நிறுவனங்களிடமிருந்து பெற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா ஒரு ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர், டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் கூட்டு உரங்களையும் பொட்டாஷ் உரத்திற்கு மாற்றாக ஆலைக்கழிவு மூலம் பெறப்படும் பொட்டாஷ் இடுவதன் மூலம் உரத்தினால் ஏற்படும் செலவை குறைத்திடலாம். மேலும், நெற்பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் மாற்று உரங்களில் இருப்பதால் (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து), இதனை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.உர விற்பனையாளர்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, ஒரே நபருக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டால், அவர்களது உர உரிமம் ரத்து செய்யப்பம். மேலும்டு உரக்கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்களை விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்கலாம்.