செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோவிலில் பிரசித்தி பெற்ற மிக பழமையான ஸ்ரீ பாடலாத்ரி நிருஸிமஹ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதிவரை வைகாசி பெருவிழா நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு இன்று காலை நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் வருகை தந்தார். அவருக்கு இந்து அறநிலைய துறை சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் இல.கணேசன் தரிசனம் செய்தார்.
பின்னர், பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் இருந்து அனைத்து மாநில மக்களும் நலமுடன் வாழ சாமி தரிசனம் செய்ததாக ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.