நாகப்பட்டினம்,அக்.19: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14ம் தேதி தொடங்கப்பட்டது. முதல் நாள் 50 பேருடன் இலங்கை சென்றது. மாலையில் இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 30 பயணிகளுடன் வந்தது. இதையடுத்து முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் திங்கள், புதன், வெள்ளிகிழமைகளில் மட்டும் 24ம் தேதி வைர இயக்கப்படும் என்றும், மீண்டும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் படி, கடந்த 16ம்தேதி (திங்கள்) 15 பயணிகளுடன் இலங்கை காங்கேசன் துறைக்கு சென்றது. நேற்று (புதன்) 23 பயணிகளுடன் சென்றது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வரும் 23ம்தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளையுடன் (20ம்தேதி) நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதையடுத்து ‘செரியாபாணி’ கப்பல், கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்திற்கு செல்கிறது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முடிந்து ஜனவரியில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் போது அந்த கப்பல் நாகப்பட்டினம் துறைமுகம் வரும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.