நாகை: நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 16ம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது. இதில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று நள்ளிரவு துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவங்க வேண்டுமென இருநாட்டை சேர்ந்த வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன் எதிரொலியாக நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என பெயரிட்ட கப்பல் சென்னை வழியாக நாகை துறைமுகத்திற்கு கடந்த 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு வரவழைக்கப்பட்டது. இதைதொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை வரும் 16ம் தேதியில் இருந்து துவங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு இலங்கை காங்கேசன் துறைக்கு 12 மணிக்கு சென்றடைந்தது. மீண்டும் மாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு நபருக்கு ரூ.7,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்று கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், 5 கிலோ வரை கையில் பார்சல் எடுத்து செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 16ம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று(12ம் தேதி) நள்ளிரவு துவங்குவதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவுக்கு www.sailindsri.com என்ற இணையதள முகவரி வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.