நாகை: நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்துக்கு 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில் பயணிகளின் வருகை அதிகரிப்பை தொடர்ந்து கூடுதல் நாட்கள் கப்பலை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதனை ஏற்று கடந்த மாதம் 21ம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் கப்பல் இயக்கப்பட்டது. இதற்கிடையே பயணிகள் வருகை மேலும் அதிகரித்து வருவதால் வரும் 8ம் தேதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும். பயணிகள் www.sailindsri.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.