நாகப்பட்டினம் : பிரசித்தி பெற்ற திருப்புகலூர் கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர சுவாமி கோயிலில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் சிவதாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனையில் ஈடுபட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு உட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் திருமருகல் அருகே திருப்புகலூரில் உள்ளது.
வாஸ்து ஸ்தலமும், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தமும் ஆன அக்னீஸ்வர சுவாமி கோயிலின் வரும் 5,ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கின்னஸ் சாதனை படைக்க சிவன் வேடமிட்டு 300 மாணவ, மாணவிகள் திருப்புகலூர் கோயிலில் சிவதாண்டவ நடமாடினர்.
திருவாரூர் ஜெயஸ்ரீ வர்ணாலய நாட்டிய பள்ளி சார்பில் நடந்த கின்னஸ் சாதனை சிவதாண்டவ நாட்டிய நடன நிகழ்ச்சியை வேளாக்குறிச்சி ஆதீனம் 18,வது சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 300 நிமிடம் இடைவிடாது சிவதாண்டவ நடனமாடி அசத்தினர்.
பின்னர் நடனம் ஆடிய 300 மாணவ, மாணவிகளுக்கு ஜெயஸ்ரீ வர்ணாலய நாட்டிய பள்ளி சார்பில் சிவ நிருத்திய ஜோதி சான்றிதழும் அதேபோல் குருமார்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 300 மாணவ, மாணவிகள் சிவ தாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.