நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதையொட்டி நாகை துறைமுகத்தில் தூர்வாரும் பணிகள் நேற்று துவங்கியது. இந்த பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுங்கத்துறைக்கு சொந்தமான கப்பலில் கடலில் 3 நாட்டிகல் மைல் தூரம் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் நாகை துறைமுகம் உட்பட 17 சிறு துறைமுகங்கள் உள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி பொதுமக்களை அழைத்து செல்லும் கப்பல் போக்குவரத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக நானும், இந்த துறையின் அதிகாரிகளும் டெல்லியில் ஒன்றிய அரசின் அமைச்சர்களை அணுகினோம். இதன் பயனாக நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு இங்குள்ளதுபோல் மருத்துவ வசதி, கல்வி வசதி, வர்த்தக வசதி கிடைக்கும். இலங்கை தமிழர்கள் மட்டும்தான் இங்கு அதிகம் வர வாய்ப்புள்ளது.
ஒன்றிய அரசின் துறைக்கு சொந்தமான கொச்சின் பகுதியில் இருந்து தான் நாகை துறைமுகத்திற்கு பயணிகளை ஏற்றி செல்லும் கப்பல் வரும். இந்த கப்பல் 150 பயணிகளை ஏற்றி செல்லும். பயணிகளை பாதுகாப்புடன் அழைத்து செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அனைத்து பணிகளும் அக்டோபர் 2ம்தேதிக்குள் முடிந்து விடும்.
குடியுரிமை அலுவலகம், வெளிநாடுகளில் இருந்து வருவோர்களை பரிசோதனை செய்ய மருத்துவ வசதி என பல்வேறு பணிகளுக்கான கட்டிடங்கள் நாகை துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக 4 வகையாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியுடன் அக்டோபர் 15ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இங்கிருந்து அயல்நாடுகளுக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.