நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 16ம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. கப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம்தேதி சோதனை ஓட்டம் துவங்கியது. காலை 9 மணிக்கு புறப்பட்டு இலங்கை காங்கேசன் துறைக்கு பிற்பகல் 12 மணிக்கு சென்றடைந்தது. மீண்டும் மாலை 3 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைந்தது.
கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்ல அனுதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவை வரும் 16ம் தேதி (வெள்ளி) முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (12ம்தேதி) நள்ளிரவு முதல் தொடங்கப்பட்டதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு www.sailindsri.com என்ற இணையதள முகவரி வசதி செய்யப்பட்டுள்ளது.