நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், கிழக்கு தொகுதி தலைவர் அகமது ஆகியோரை நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 18ம்தேதி சீமான் விலக்கியுள்ளார். இதற்கு உரிய பதில் கேட்டு இருவரும் கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து இவர்கள் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட மாவட்ட இளைஞர் அணி பாசறை செயலாளர் பிரவீன், இளைஞர் அணி பாசறை கீழ்வேளூர் தொகுதி செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட 11 பேர் இருவருக்கும் ஆதரவாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
அப்போது நாகராஜன், அகமது ஆகியோர் நிருபர்களிடம், தவறுகளை சுட்டிக்காட்டினால் சீமான் திருட்டு பழி சுமத்துகிறார். முதலில் விஜய்யுடன் கூட்டணி என்று எல்லாம் பேசினார். தற்போது அவரை நோக்கி விமர்சனம் செய்கிறார். லாரியில் அடிபட்டு இறப்பாய் என சாபம் கொடுக்கிறார். எந்த ஊரில் நிகழ்ச்சி நடந்தாலும் சீமான் ஏசி கார், 5 நட்சத்திர விடுதியில் தங்கி கட்சியின் தம்பி, தங்கைகள் பணத்தில் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். எனவே அவருடன் இருந்தது எங்களுக்கு ஏமாற்றமே என்றனர்.