சென்னை: நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உயர்த்தும் என்ற உயரிய இலக்குடன் தீவிரமாக பயணித்து வருகிறது. இந்த இலக்கை அடைவதற்கு உற்பத்தித் துறையுடன், சேவைத் துறையின் வேகமான வளர்ச்சியும் அவசியம் என்பதை உணர்ந்து, மாநிலம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்தில் புதிய மினி டைடல் பூங்காவை அமைக்கும் திட்டத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு திட்ட ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாகையில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்கா, தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப சேவைகள் துறையில் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம், நாகை மாவட்டத்தின் இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, தமிழ்நாட்டில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும். இதன்மூலம், விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழிலுக்கு பெயர் பெற்ற நாகப்பட்டினம், தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.