நாகை: நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு தொடங்கப்பட உள்ள கப்பலில் பயணிக்க கட்டணம் ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இண்டிஸ்ட்ரி என்ற நிறுவனம் கப்பல் சேவையை தொடங்க உள்ளது. சிவகங்கை என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த கப்பல் சேவை நாளை மறுநாள் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் இயக்கப்படும் என்றும், காங்கேசன்துறைக்கு பகல் 2 மணியளவில் சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள் காலை 10 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் நாகைக்கு அந்த கப்பல் இயக்கப்படும். ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தினசரி காலை 10 மணிக்கு நகையில் இருந்தும், பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கப்பல் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 123 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் உள்ளன. சாதாரண இருக்கையில் பயணிக்க ரூ.5,000யும், பிரீமியம் பயணத்திற்கு ரூ.7,500யும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.