நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு 50 பயணிகளுடன் நேற்று சிவகங்கை கப்பல் சென்றடைந்தது. பலமுறை நிர்வாக பிரச்னையால் நிறுத்தப்பட்ட நாகை-இலங்கைக்கு கப்பல் சேவை நேற்று முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற பெயரில் கப்பல் சேவை நேற்றுதொடங்கியது.
கப்பலில் பயணம் செய்ய 4 இலங்கை தமிழர்கள் உட்பட 50 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தனர். இவர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனைகள் அனைத்தும் நிறைவு பெற்று பயணிகள் 11 மணிக்கு கப்பலில் அமர வைக்கப்பட்டனர். இதன்பின்னர் 12.20 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் புறப்பட்டது.
கப்பல் சேவையை நாகை கலெக்டர் ஆகாஷ், நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் காங்கேசன் துறைக்கு 4.30 மணிக்கு சென்றதது. இன்று (17ம் தேதி) காலை காங்கேசன் துறையில் இருந்து காலை 10 மணிக்கு சிவகங்கை கப்பல் புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 2 மணிக்கு வரும்.