சென்னை: பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள பாரதி அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ்நாடு செயல்படுத்தி வரும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் மூலம் இரண்டிலும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ஆகும் செலவை தமிழக அரசு ஏற்றுள்ளது. மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், மேயர் பிரியா முன்னிலை வகித்தனர். எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் எம்எல்ஏ ரவிச்சந்திரன், மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம் ஆசாத், வேளாங்கண்ணி கல்லூரி முதல்வர் கிளாடிசன், உதயசங்கர் துரைக்கண்ணு, முரளி, ராஜசேகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தியால்பேட்டை வெங்கடா தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலை, ஜக்காபுரத்தில் தயாளு அம்மாள் டிரஸ்ட்டை தொடங்கி வைத்தார்.