Friday, July 18, 2025
Home செய்திகள்Banner News நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்கள், 1,00,960 விரிவுரையாளர்களுக்கு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்கள், 1,00,960 விரிவுரையாளர்களுக்கு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

by Suresh

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற புதுமையான திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்தப் புதுமையான திட்டங்கள் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சியை உறுதி செய்கின்றன. முதல்வரின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

குறுகிய காலப் பயிற்சி;
கடந்த நான்கு ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

முன்கற்றல் அங்கீகாரம்;
முன்கற்றல் அங்கீகாரம் என்பது, அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை அங்கீகரித்தல் ஆகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல முகாம்களை நடத்தி கட்டுமானத் துறை, தளவாடம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தோல் மற்றும் நூல் தொழில் துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் 1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகார சான்றிதழ்களை வழங்கியுள்ளது.சமூக நல இல்லங்களில் வசிப்பவர்களுக்குத் திறன் பயிற்சிகள் :திராவிட மாடல் அரசினால் தாம்பரம், சென்னை, கடலூர், சிவகங்கை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சமூக நல இல்லங்களில் தங்கி இருபவர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப திறன்களுடன் சேர்த்து ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு மற்றும் அலுவலக வரவேற்பாளர் ஆகிய பாடநெறிகளில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

15,890 இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள்:
5,732 தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், 2,552 முகாம்வாழ் இலங்கை தமிழர்கள், 347 பழங்குடி இளைஞர்கள், 199 மாற்றுத் திறனாளிகள், 1,255 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிக்கும் இளைஞர்கள், 167 முன்னாள் ராணுவ வீரர்கள், 173 மீனவர்கள், 1,210 கலைஞர்களுக்குக் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழும், 150 மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு மூன்று சக்கர வாகன ஓட்டுதல் பயிற்சியும், 164 பெண்களுக்கு மோட்டார் வாகன ஓட்டுநர் பயிற்சியும், 270 பேர்களுக்குப் பல்வேறு கைவினை தொழிற்பயிற்சிகளும், 3,671 பேர்களுக்கு குடிநீர் குழாய்களில் திறன் அடிப்படையிலான சிறுபழுது சரிசெய்தல் மற்றும் பராமரிப்புப் பயிற்சியும் என மொத்தம் 15,890 இளைஞர்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

வடசென்னை வளர்ச்சித் திட்டம்;
திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் வட சென்னைப் பகுதியைச் சார்ந்த 1,200 பேர் பங்கேற்றனர். அவர்களில் 297 பேர் ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் பணியமர்த்தல் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசுப் பள்ளி 12ம் வகுப்புத் தொழிற்பயிற்சி மாணவர்களின் செயல்முறை திறன்களை மேம்படுத்தல் 12ம் வகுப்பில் பயிலும் 2,693 தொழிற்பயிற்சி மாணவர்களுக்குச் செயல்முறை திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.ஆங்கிலம் பேசுதல் மற்றும் நற்பண்பு மேம்பாட்டு திறன் பயிற்சி : ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுதல் மற்றும் நற்பண்பு மேம்பாடு திறன்பயிற்சி 2,59,072 மாணவர்களுக்கு 2021-22 முதல் வழங்கப்பட்டுள்ளது.

மாபெரும் வெற்றித் திட்டமான நான் முதல்வன் திட்டம் : கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் திட்டமே நான் முதல்வன் திட்டம். 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி முதல்வரின் பிறந்த நாளன்று, அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மாற்றியமைக்கக்கூடிய ஒரு மாபெரும் வெற்றித் திட்டமாக இளைஞர்களுக்குப் பயனளித்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன்:மொத்தம் 10,91,022 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வியாண்டு முதல் 41 கட்டாயத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 18.12.2024 அன்று கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் துணை முதலமைச்சரால் 29 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயல்படும் வண்ணம் ரூ. 30.17 கோடி மதிப்பீட்டில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “நான் முதல்வன்”திட்டம்: 2022-23ம் கல்வியாண்டு முதல் “நான் முதல்வன்” திட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு இதுவரை 25,63,235 மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டம்: பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் நான் முதல்வன் விரிவாக்கம் செய்யப்பட்டு. 2023-2024 முதல் இதுவரை 8,242 விரிவுரையாளர்களும், 3,77,235 மாணவர்களும் பயிற்சி பெற்றுள்ளனர்.தொழிற்பயிற்சி நிலையங்களில் நான் முதல்வன் திட்டம் : இத்திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களில் 1,07,341 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் சார்ந்த அடிப்படை ஆங்கிலப் பாடப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர்: மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம் செயல்பாடுகள்: கடந்த நான்கு ஆண்டுகளில், 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 2,60,682 மாணவர்களில் 63,949 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். உயர்கல்வி படிப்பதற்குப் பாலம் அமைக்கும் உயர்வுக்குப்படி (பள்ளிகள்) 2023 மற்றும் 2024 “நான் முதல்வன் உயர்வுக்குப்படி ”திட்டம் 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வழிவகை செய்துள்ளது. நான் முதல்வன் நிரல் திருவிழா : நிரல் திருவிழா 1.0ல் மொத்தம் 8,486 குழுக்கள் பங்கேற்றன. இந்தக் குழுக்களின் சிறந்த 1,000 திட்டங்கள் வளர்ச்சி பெறுவதற்குத் தகுந்த திட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட

1,000 அணிகளுக்கும்,தங்களுடைய திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு அணிக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டது. இறுதியாக, நிபுணர்கள் மற்றும் முதலீட்டார்களின் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த 50 திட்டங்களுக்கு தலா 1,00,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் 43 அணிகள் தங்கள் நிறுவனங்களை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளன.

உயர்கல்வி நோக்கி வழிகாட்டும் கல்லூரிக்கனவு 2024;
இந்தக் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்லூரிக்கனவு நிகழ்ச்சி மூலமாகவும், அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலமாகவும் 1,87,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் 81,149 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.இந்தியத் திறன்போட்டி 2021: தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 84 மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றனர், இதில் 36 பேர் இந்தியத் திறன் போட்டி 2021க்கு முன்னேறினர், மேலும் 23 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்றனர்.

இந்தியத் திறன்போட்டி 2024: தமிழ்நாட்டில் இருந்து 87 போட்டியாளர்கள் 2024ம் ஆண்டிற்கான இந்தியா திறன் போட்டியில் கலந்து கொண்டு 6 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், 9 வெண்கலப் பதக்கங்கள், 17 சிறப்புப் பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்கள் வென்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றனர். உலகத்திறன்போட்டி 2024: உலகத் திறன் போட்டி 2024, செப்டம்பர் 10 முதல் 15 வரை பிரான்ஸ், லியோன் நகரத்தில் நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 போட்டியாளர்கள் இந்தியா சார்பாக பங்கு பெற்றனர். முதல் முன்னெடுப்பாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுள் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களில் 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.

அடுத்தகட்டமாக, இத்திட்டத்தின்கீழ், ஜப்பான் நாட்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த 15 மாணவிகள் தொழில்முறை பயிற்சி மேற்கொண்டதுடன் பணிநியமனமும் பெற்றுள்ளனர் என்பதும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ள தனிச் சிறப்பாகும். 2025 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 6 மாணவர்கள் தென் கொரியா நாட்டில் உள்ள புசான் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் காச்சன் பல்கலைக்கழகத்தில் இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெற்றுள்ளனர்.நான் முதல்வன் – போட்டித் தேர்வுகள் பிரிவு, யு. பி. எஸ். சி குடிமைப் பணிதேர்வு – 2024: ஒன்றிய அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை மற்றும் உறைவிடப் பயிற்சித் திட்டங்களின் கீழ் 1,000 குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அக்டோபர் 2023 முதல், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.

இதுவரை, 1,288 மாணவர்கள் 2024ம் ஆண்டு குடிமைப் பணிமுதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு இறுதித் தேர்வுக்கான ஊக்கத்தொகையாக தலா ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. குடிமைப்பணித் தேர்வில் 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து 36 இளைஞர்களும், 2023ம் ஆண்டில் 47 இளைஞர்களும் தேர்ச்சி பெற்றனர். 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று வெற்றி கண்டவர்கள் என்பது, நான் முதல்வன் திட்டத்திற்குக் கிடைத்துள்ள தனிப்பெருமையாகும். 510 மாணவர்களுக்கு (வங்கிப் பணிக்கு 361 பேர் SSC க்கு 149 பேர்) உறைவிடப் பயிற்சி வழங்கப்பட்டது. எஸ்எஸ்சில் பல்வேறு பதவிகளுக்கு 19 மாணவர்களும் ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு 2 மாணவர்களும் ஐபிபிஎஸ் மூலம் வங்கிப் பணிகளுக்கு 37 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தங்கும் வசதியுடன் கூடிய உறைவிடப் பயிற்சி;
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் தேர்வுகளுக்கான பயிற்சிகளுக்கு 300 மாணவர்களும், வங்கிப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு 700 மாணவர்களும், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்;
முதல்வரால் 15.9.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.15 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 2023-2024ம் ஆண்டிற்கு ரூ.8,123.83 கோடியும், 2024-2025-ம் ஆண்டிற்கு ரூ.13,721.50 கோடியும் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை உதவி பெறாதவர்களும் உரிமைத் தொகை பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் பேரவையில் அறிவித்தார். அதன்படி, விரைவில் அவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது.

இப்படி, நீண்ட நெடுங்காலமாகக் கிடைக்காத பட்டாக்களைக் குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் வழங்கியும், இணையதளம் வாயிலாகச் சுயச் சான்றி தழ் அடிப்படையில் வீடு கட்டும் அனுமதிகள் பெறுவதிலும் திராவிட மாடல் அரசு மக்களுடன் முதல்வர் என்னும் புரட்சிகரமான திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திவருகிறது. இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை எண்ணிலடங்கா மக்கள் நலம் பெறத் துணை புரியும் மகத்தான துறையாக வளர்ந்து பயனளித்து திராவிட மாடல் அரசுக்குப் பெருமைகள் சேர்த்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi