தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.7.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில், “வெற்றி நிச்சயம்” திட்டத்தினை தொடங்கி வைத்து, “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
“நான் முதல்வன்” திட்டம்
அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்ற தனது கனவு திட்டத்தை 2022-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று தொடங்கி வைத்தார்.
2022-ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே தொடங்கப்பட்ட “நான் முதல்வன்” திட்டம், பெற்ற வரவேற்பினையும், வெற்றியையும் கண்டு, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது, மேலும், அதன் தொடர்ச்சியாக 2023-2024 ஆம் கல்வியாண்டில் தொழில்கல்விக்கு அடித்தளமாக விளங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் திறன் பயிற்சி வழங்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்ற இலக்கினைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு உயர்தரத்துடன் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது மிகப் பெரிய சாதனை ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் நகர்ப்புற மாணவர்களின் திறன்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களை எவ்வித செலவுமின்றி உயர்த்துவதற்கு, Microsoft, IBM, ORACLE, GOOGLE, CISCO, HCL, Infosys, AWS, Siemens, FANUC, Dassault, L&T போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தப் பயிற்சிகள் Big Data, Internet of Things, Robotics, Artificial Intelligence, Machine Learning, Industry 4.0, Robotics, Building Information Modelling போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. திறன் வகுப்புகளை மாணவர்கள் எளிதிலும் இலவசமாகவும் பெற ஏற்றவாறு பிரத்யேகமாக இணையதளம் ஒன்று (www.naanmudhalvan.tn.gov.in) இயக்கப்படுகிறது.
கல்லூரிப் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு பல வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு ஏற்ற வேலையை பெற்றுத்தர உதவுகிறது ‘நான் முதல்வன்- தமிழ்நாடு மாநில அளவிலான வேலைவாய்ப்பு திட்டம்’. கடந்த 3 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களில் பணிக்கு விருப்பம் தெரிவித்தோரில் 3,28,393 மாணவர்கள் Infosys, HCLTech, LTI Mindtree, Valeo RDC Concrete, Tech Mahindra, ADP, Embed UR, HL Mando, FastenX, Adroit tech மற்றும் Stellantis போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், நான் முதல்வன் SCOUT திட்டத்தின் மூலம் மாணவர்கள் உலகளாவிய தொழில்முறை பயிற்சியினை மேற்கொள்ள, UK, Japan, South Korea ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கப்பட்டு வருவதுடன், அதன் தொடர்ச்சியாக Scotland, Sweden உள்ளிட்ட நாடுகளுக்கு இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் செல்ல உள்ளனர். வெளிநாடுகளிலேயே பணி நியமனம் பெறுவதற்கும் இத்திட்டம் உறுதுணையாக உள்ளது.
“வெற்றி நிச்சயம் திட்டம்” தொடக்கம்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் வாயிலாக உலகத் தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சான்றிதழுடன் கட்டணமின்றி பல்வேறு துறைகளிலும் குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு முழுவதுமுள்ள 18 வயது முதல் 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திறன் பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயிற்சியளிக்க தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் பயிற்சித் தொகையினை அரசே முழுவதுமாக ஏற்கும். அதுமட்டுமல்லாமல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரான மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கை தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு இளைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் வழியாக கண்டறிந்து இத்திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஊக்கத்தொகையாக ரூ.12,000 வரை அளிக்கப்படும்.
மேலும், தொலைதூர மாவட்டங்களிருந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும். இந்த பிரத்தியேக திறன் பயிற்சியானது 38 தொழிற்பிரிவுகளில் 165 பயிற்சிகளை 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது. மாவட்டந்தோறும் உள்ள முதன்மையான தொழிற்பிரிவுகளைக் கண்டறிந்து அதன் தொடர்புடைய பயிற்சி நிறுவனங்கள், தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த திறன் பயிற்சி முன்னெடுப்புகள் மூலம் அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.
இந்த முன் முயற்சியின் மூலம் ZF Rane TVS Supply chain, MRF, Saint Gobain, TI Murugappa Groups, Brakes India, Tech Mahindra Foundation, Tata Electronics, Groom India Salon & Spa, LG, Ashok Leyland, Asahi India Glass Limited, Apollo, Amazon Web Services, Tally போன்ற முன்னணி நிறுவனங்களில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். இதில், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு தரமான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, இத்திட்டத்தில் ஜெர்மன் உள்ளிட்ட அயல்மொழிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அயல்நாட்டில் வேலைவாய்ப்புக்கான பாதைகள் உருவாக்கித் தரப்படும்.
இத்திட்டத்தில் சேர்வதை எளிதாக்கும் வகையில் Skill Wallet என்ற பிரத்தியேக கைபேசி செயலி (Mobile App) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது மாணவர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சியை பதிவு செய்யும் வகையில் தேவையான அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. வளர்ந்து வரும் தொழில்துறைக்கு ஏற்ப இளைஞர்கள் தாங்கள் விரும்பும் மிகப்பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பை சுலபமாக பெறுவதற்கும் அதற்குரிய நவீன தொழில் நுட்பம் சார்ந்த திறன் பயிற்சிகளும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன் பயிற்சிகளையும், சிறந்த நிறுவனங்கள் மூலமாக பெறுவதற்கும் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலையை எளிதாக்கும் வகையில் எந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது அதற்குரிய பயிற்சி என்னவென்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான
“நான் முதல்வன்” திட்டத்தின் மூன்றாம் ஆண்டு வெற்றி விழாவில், மாணவர்களின் புது கண்டுபிடிப்புகள், கண்டறிதல்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப உருவாக்கங்களைப் பிரதிபலிக்கும் “நான் முதல்வன் நிரல் திருவிழா” கண்காட்சியினை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினர்.மேலும், இவ்விழாவில், தமிழ்நாடு திறன் போட்டிகள் 2025 பதிவு தொடக்கம், CSR தொழில் பங்குதாரர்கள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை கௌரவித்தல், “வெற்றி நிச்சயம்” திட்டம் தொடக்கம், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பரந்தாமன், ஆர்.டி. சேகர், துணை மேயர் மு. மகேஷ் குமார், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், உயர்கல்வித் துறை செயலாளர் முனைவர் பொ. சங்கர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஏ.ஆர். உன்னி கிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.