* சிறப்பு செய்தி
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தின் மூலம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும், வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிறப்பு திட்டமாக ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் தலைமுறையை தாண்டி நிற்கும் திட்டமாக ‘நான் முதல்வன்’ செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை கல்லூரிக் கனவுகளை நிறைவேற்றுவது என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இந்த திட்டம் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் மிகவும் அதிகம். இந்திய சராசரியை விட மிக மிக அதிகம். ஆனாலும் கல்லூரி முடித்தவர்கள் வேலைக்கு உடனடியாக தயாராகிறார்களா என்றால், பல சமயங்களில் இல்லை என்னும் பதிலும் வருகிறது. பல தொழில்நுட்ப மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களில் கல்லூரி முடிப்பவர்களை உடனடியாக பணியமர்த்த முடியவில்லை என்னும் குரல்கள் கேட்கின்றன. இந்த சிக்கலுக்கு மிகவும் அடிப்படையான காரணம் பாடத்திட்டம், அதோடு தொழில்துறையினரின் தேவை மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாடத்திட்டம் அடிக்கடி மாறுவதில்லை. தொழில்நுட்பத்துறையில் மெஷின் லேர்னிங், ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என தேவை மாறிக்கொண்டே வருகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை அடிக்கடி மாற்றவும் முடியாது. அதனால், தொழில்துறைக்கு ஏற்ப மாணவர்களை இந்த திட்டத்தின் மூலம் தயார் செய்து வருகிறார்கள்.
கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் என அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் ஒவ்வொரு செமஸ்டர்களிலும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு கோர்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த துறைகளில் இருந்தே வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பாடம் எடுக்கப்படுகிறது. கல்லூரி பாடத்துடன் சேர்த்து இதிலும் மாணவர் தேர்ச்சி அடைய வேண்டும். படித்து முடித்துவிட்டு வேலை என்ற சொல்லை மாற்றி படிக்கும்போதே வேலையை கற்றுக்கொள் எனும் அடிப்படையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. உயர்வுக்கு படி, கல்லூரிக் கனவு, போட்டித்தேர்வுக்கு பயிற்சிகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இலவச உண்டு, உறைவிட பயிற்சி வழங்கி வருகிறது. கடந்த வருடம் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற நிறைய மாணவ, மாணவிகள் யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். தேர்வாகியுள்ளனர். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), ரயில்வே, வங்கிப்பணி ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்கு 6 மாத இலவச பயிற்சி வழங்கி வருகிறது. போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய நான் முதல்வன் திட்டத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெயபிரகாசன் கூறியதாவது: ’நான் முதல்வன்’ திட்டத்தின் சிறப்பே, பல்வேறு துறைகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அத்துறையில் இருக்கும் தற்போதைய தேவைகளை, திறன்களை வளர்த்துக் கொள்ள அந்த துறையைச்சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் வல்லுனர்கள் குழு உருவாக்கிய பாடத்திட்டத்தில் பயிற்சி பெறுவதாகும். அதோடும், கல்லூரி பேராசிரியர்கள் மட்டுமல்லாமல் அந்தந்த துறை வல்லுனர்களே இந்த பாடங்களை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் கற்றுக்கொடுப்பது மாணவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அளிக்கும் பயிற்சிகள் அனைத்துமே சில சுயநிதி, தன்னாட்சிக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு மாணவனுக்கு குறைந்தது 30 ஆயிரம் கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு அதனை இலவசமாக மாணவ-மாணவிகளுக்கு வழங்குகிறது. இதற்கான, பாடத்திட்டம் உருவாக்குவதற்கு சர்வதேச அளவில் முக்கியமாக நிறுவனங்கள் இணைக்கப்பட்டு தற்போதைய சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. சில நிறுவனங்கள் அவர்களின் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்தும் தமிழ்நாடு அரசுக்காக இலவசமாக பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது.
தமிழகத்தில் படித்தவர்கள் பலர் உள்ளனர், ஆனால், அவர்கள் அனைவரும் வேலைக்கு ஏற்றவர்கள் இல்லை எனும் எண்ணம் சில தொழில்துறையினரிடம் உள்ளது. அதனை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த திட்டம். தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமாக செயல்படும் தனியார் கல்லூரிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரிகள் மட்டுமல்லாமல் கலைக்கல்லூரிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வேலை பளு இருக்கும் சூழலில் இதனையும் கொண்டுவந்தால் அந்த திட்டத்தின் வெற்றி குறையக்கூடும் என கருத்தில் கொண்டு இவற்றை கட்டாய பாடத்திட்டமாக மாற்றி இருக்கிறோம்.
திறன் மேம்பாட்டுக் கழகம், 2009 ஆண்டு முதல் 16 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எத்தனை பேருக்கு இப்படி ஒன்று உள்ளது எனக்கேட்டால் தெரியாது. நான் முதல்வன் திட்டம் தான் இதனை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தது. தமிழகத்தின் சிறந்த திட்டம் என்றே இதனை சொல்லலாம். தமிழ்நாடு அரசின் இந்த வளர்ச்சியை பார்த்து, ஒடிசா, கர்நாடகா, பீகார், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சொல்லி சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களின்
எண்ணிக்கை ஆண்டு வாரியாக
2022-23ம் ஆண்டு
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 4,60,734
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 8,53,785
2023-24ம் ஆண்டு
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3,23,000
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 8,88,170
பாலிடெக்னிக் மாணவர்கள் 1,92,784
ஐடிஐ 64,149
2024-25ம் ஆண்டு (நடந்துகொண்டுள்ளது)
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3,29,342
கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 5,67,019
பாலிடெக்னிக் மாணவர்கள் 1,84,361
ஐடிஐ 43,190
வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் ஆண்டு வாரியாக
பொறியியல் (2022 முதல்) 91,234
கலை மற்றும் அறிவியல் 1,18,685
பாலிடெக்னிக் 26,419
ஐடிஐ 15,431
* நான் முதல்வன் திட்டத்தின் பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட், ஆட்டோ டெஸ்க், டிசிஎஸ், ஹெச்.சி.எல், ஏடபிள்யூ, மகேந்திரா, கேம்பிரிட்ஜ் பல்கலை, இன்போசிஸ், ஐபிஎம், கூகுல் க்ளவுட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் இத்திட்டத்தில் கைகோர்த்திருக்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வி அளிக்கப்பட்டு, வழங்கப்படும் சான்றிதழ்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.
* வெப்சைட்டில் பதிவேற்றம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறுபவர்களின் விவரம் கல்லூரி வாரியாக, மாவட்ட வாரியாக, துறை வாரியாகவும் பிரித்து வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அந்தத்துறை சார்ந்த ஆட்கள் பணிக்கு தேவை என்றால் இந்த வெப்சைட்டின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கான பணிகள் 2 அல்லது 3 மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும்.
* சிவில் சர்வீஸ் தேர்வில்…
2024ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி தரவரிசை பட்டியல் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கலை மற்றும் அறிவியலில் 10 பல்கலைகளில் 821
கல்லூரிகள்
பொறியியலில் அண்ணா
பல்கலை மூலம் 373
கல்லூரிகள்
பாலிடெக்னிக் 459
ஐடிஐ 412