*அரசு கொறடா ராமசந்திரன் தகவல்
ஊட்டி : நான் முதல்வன் திட்டம் மூலமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இதுவரை 4 ஆயிரத்து 111 மாணவர்களின் படிப்பிற்கு ஏற்றார் போல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என அரசு தலைமை கொறடா தெரிவித்தார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், கல்லூரி மின்னணுவியல் துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓம் முருகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்தார்.
அரசு தலைமை கொறடா ராமசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று பேசியதாவது: உலக புகழ் பெற்று சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1955ம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல்ரவராக இருந்த போது, கோடைக்கால தலைமை செயலகமாக செயல்பட்ட இந்த இடம் அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது.
துவக்கத்தில் 3 இளநிலை பாடப்பிரிவுகளுடன் இந்த கல்லூரி துவக்கப்பட்டது. இக்கல்லூரி நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் கடந்த 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இரு பாலர் பயிலும் இக்கல்லூரியில் 2024025ம் ஆண்டில் 2047 மாணவர்களும், 1571 மாணவிகளும் என மொத்தம் 3 ஆயிரத்து 618 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆண்டு தோறும் ஆயிரம் மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று செல்கின்றனர்.
உயர் கல்வி பயிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக முதல்வர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தில் 431 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 597 மாணவர்களும் இக்கல்லூரியில் பயன் பெற்று வருகின்றனர்.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினர் மூலம் 2599 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம் மூலமாக இக்கல்லூரியில் 4 ஆயிரத்து 111 மாணவர்களின் படிப்பிற்கு ஏற்றார் போல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்விக்காக 2023-24ம் ஆண்டிற்கு ரூ.40.299 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2024-25ம் ஆணடிற்கு ரூ.44.000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2025-26ம் ஆண்டிற்கு ரூ.46.000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2023-24ம் ஆண்டில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.3 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியை விட 26 சதவீதம் அதிகம்.
2021 மே மாதம் முதல் மார்ச் 2024ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு முதலீட்டு ஊக்குவிப்பு முயற்சியின் பலனாக மாநிலத்தில் ரூ.32.03 லட்சம் கோடி நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்ககூடிய வகையில் ரூ.10.16 லட்சம் ேகாடி மதிப்பிலான முதலீட்டிற்கான உறுதி பாடுகள் பெறப்பட்டள்ளன.
தமிழ்நாடு 2024025ம் ஆண்டில் 9.69 உண்மை பொருளாதார வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. 2021-22ம் ஆண்டு முதல் 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்துடன் சீரான வளர்ச்சியை கண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 7 மாபெரும் தனியார் வேலை வாய்ப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 15 ஆயிரத்து 76 பேர் கலந்து கொண்டனர். 661 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
இதில், 3382 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிதாக கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு உற்சாகமான வாய்ப்புகள், தனிப்பட்டி வளர்ச்சி மற்றும் புதிய நட்புக்களின் காலம். இந்த புதிய அத்தியாயத்தை உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளவும், உங்களுக்கு கிடைக்கும் இந்த பரந்த வளங்களை ஆராயவும், துடிப்பான வளாக சமூகத்தில் தீவிரமாக பங்கேற்று கொள்ள வேண்டும்.
இங்கு உங்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சாராத செயல்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஆர்வத்தை தூண்டும் விளையாட்டு கிளப்புடுகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஈடுபடுங்கள்.
உங்களுக்கு உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்பட்டால், உங்கள் பேராசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள் அல்லது வளாகத்தில் கிடைக்கும் பல்வேறு ஆதர சேவைகளை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள். கல்லூரி படிப்பு சவாலானதாக இருக்கலாம். ஆனால், இந்த சவால்கள் வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புக்களையும் வழங்குகின்றன.
அவைரை நேர்மறையான அணுகு முறையுடனும், விடா முயற்சியுடனும் அணுகுங்கள். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.