சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில், நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த நவம்பர் முதல், சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் தங்கதுரை, வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், மேட்டூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சுதாகரன், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவாளர்களுடன் அக்கட்சியை விட்டு விலகினர்.
இந்நிலையில், நேற்று நாதக சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன், கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகி கொள்வதாக தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் சீமானுக்கு அனுப்பிய கடிதத்தில், களத்தில் உண்மையாக உழைத்தவர்களையும், முன்னோடிகளையும் உதாசீனப்படுத்தி புறக்கணிக்கும் முகமாகவே இருக்கும் உங்கள் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.