சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், சாதி சார்ந்த சொற்களை பயன்படுத்தி பாடல் பாடினார். அதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதே பாடலை சீமானும் பாடி, முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார். இந்த நிலையில் ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்த அஜேஷ் என்பவர் சீமான் மீது கடந்த 16.07.2024 அன்று புகார் அளித்தார்.
அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அதில் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர். அதனை தொடர்ந்து புகார் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில் ஆஜரான பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனை ஆணையம் கண்டித்தது. சீமான் மீது வழக்குப் பதிவு செய்து செப்டம்பர் 2ம் தேதி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.