சென்னை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை நிர்வாகி சேவியர் பெலிக்சை கட்சியிலிருந்து நீக்கி, அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரை இழிவுபடுத்தி பாடியதால் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சாட்டை துரைமுருகனின் செல்போனில் இருந்த சீமான் தொடர்பான பல்வேறு ஆடியோக்கள் வெளியாகின.
இதற்கு திருச்சி எஸ்பி வருண்குமார் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டி அவரைப் பற்றி ஆபாசமாக பதிவிட்டு வருகின்றனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரை நேரடியாக குறிப்பிட்டு, சாதிய நோக்கத்துடன் பேசி குற்றம்சுமத்தி வந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் வருண்குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், தனது வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார். அதில், ‘தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 21 பேர் மீதும் எஸ்பி வருண்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் பெலிக்ஸ், திருச்சி எஸ்பி வருண்குமாரின் விளக்கம் கேட்ட நோட்டீசுக்கு பதில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதில், ‘‘எஸ்பி வருண்குமாரின் சாதி என்ன என்பதே தெரியாது. சாட்டை துரைமுருகனிடம், வருண்குமாரின் சாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நம்பி நான் பேசிவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரியாது.
இளம் அதிகாரியான அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவர் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்து விவகாரத்துக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பு இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவன். போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை இருக்க வேண்டும் உள்பட போலீசாரின் உரிமைகளுக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளக்கம் கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில், கட்சி தலைமையின் ஒப்புதல் இல்லாமல் திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு தன்னிச்சையாக விளக்கம் கடிதம் கொடுத்ததாக வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சேவியர் பெலிக்ஸ் கட்சியிலிருந்து அவரை அதிரடியாக நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்த கடிதத்துக்கு தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் கடிதம் அனுப்பியதால் அவரை கட்சியலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன்’’ என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.