சண்டிகர்: அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: ஊழல்வாதிகள் யார்? ஊழல்வாதிகள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்பவர்கள் அல்ல. மாறாக, அமலாக்கத்துறை கைதுக்கு பயந்து பாஜவில் சேருபவர்கள் தான் ஊழல்வாதிகள். அமலாக்கத்துறை கைதுக்கு பயந்தோ, கைது செய்யப்பட்ட பிறகோ கூட பாஜவில் சேராதவர்கள் உண்மையில் நேர்மையானவர்கள். அவர்கள் என்றாவது ஒருநாள் வௌியே வந்து விடுவார்கள். இது பாஜவுக்கு தெரியும். பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் என்னை கைது செய்வீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் என்னை கைது செய்யுங்கள், நீங்கள் என்னை சுட்டு கொன்று விடுங்கள், நான் இறந்து விடுவேன், ஆனாலும் உங்களுக்கு எதிரான என் குரல் உங்கள் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கும். அது நிம்மதியாக உங்களை தூங்க விடாது. இவ்வாறு அவர் பேசினார்.