பிரேசிலியா: கிட்டத்தட்ட 16 ஆண்டாகியும் குத்துச்சண்டை வீரரின் மரணத்தில் மர்மம் விலகாததால், மீண்டும் விசாரணை நடத்த அவரது குடும்பத்தினர், நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான ஆர்ட்டுரோ காட்டி (37), கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி தனது மனைவி அமண்டா ரோட்ரிக்ஸ் மற்றும் 10 மாத குழந்தையுடன் பிரேசிலின் போர்ட்டோ டி கலின்ஹாஸ் என்ற இடத்தில் விடுமுறையை கழித்த போது, அங்கிருந்த குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேசில் காவல்துறை ஆரம்பத்தில் இதை கொலையாகக் கருதி, அவரது மனைவியை கைது செய்தது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு, ஆர்ட்டுரோ காட்டி தனது மனைவியின் கைப்பை பட்டையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கைது ெசய்யப்பட்ட அமண்டா விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கேள்வி இன்றும் மர்மமாகவே உள்ளது. ஆர்ட்டுரோ காட்டியின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை ஏற்க மறுத்து வருகின்றனர். மேலும், அவரது மரணம் கொலை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆர்ட்டுரோ காட்டியின் மேலாளர் பாட் லின்ச் மற்றும் தனியார் புலனாய்வாளர்கள் பால் சியோலினோ மற்றும் ஜோ மவுரா ஆகியோர், பிரேசில் காவல்துறையின் விசாரணை குறைபாடு உள்ளது என்று குற்றம்சாட்டினர். அவர்களின் 10 மாத விசாரணையில், ஆர்ட்டுரோ காட்டியை தூக்கில் மாட்டப் பயன்படுத்தப்பட்ட கைப்பை பட்டை, அவரது 160 பவுண்டு எடையை தாங்க முடியாதவாறு பலவீனமாக இருந்ததாகவும், பட்டையின் நீளம் அவரது கழுத்தைச் சுற்றுவதற்கு போதுமானதாக இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
மேலும், ஆர்ட்டுரோ காட்டியின் உடலில் காணப்பட்ட தலையில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ரத்தக் கறைகள், அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பின. இதனால், ஆர்ட்டுரோ காட்டியின் மனைவி அல்லது வேறு யாராவது அவரைக் கொன்றிருக்கலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், ஆர்ட்டுரோ காட்டிக்கு ஏற்கனவே தற்கொலை எண்ணங்கள் இருந்ததாகவும், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியன அவரது வாழ்க்கையை பாதித்ததாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன. கடந்த 2006ல், அவரது முன்னாள் காதலி ஒருவர், மது, கோகைன் மற்றும் போதைப் பொருட்களால் ஆர்ட்டுரோ காட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். மேலும், அவரது நண்பர் மரியோ கோஸ்டா, கடந்த 2004ல் ஆர்ட்டுரோ காட்டி தற்கொலை செய்து கொள்வதாக பேசியதாக தெரிவித்தார்.
அதேநேரம் ஆர்ட்டுரோ காட்டியின் மனைவி அமண்டா, தனது கணவர் மது அருந்தியபோது ஆக்ரோஷமாக மாறியதாகவும், அவர்களது திருமணம் பிரச்னைகளால் சூழப்பட்டிருந்ததாகவும் கூறினார். இந்த சூழலில் தான் தங்களது விடுமுறையை கழிக்கவும், தங்களது பிரச்னையில் இருந்து இருவரும் சுமூகமாக வாழ்க்கையை நடத்தவும் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள பிரேசிலின் போர்ட்டோ டி கலின்ஹாஸ் சென்றதாகவும் கூறியுள்ளார். தனது கணவர் மரணத்திற்கு முந்தைய நாள் இரவு வரை, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் ஆர்ட்டுரோ காட்டியின் குடும்பத்தினரின், அவரது தற்கொலை மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய கோணத்தில் மீண்டும் விசாரணையை நடத்த வேண்டும் என்று 16 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.