நியூயார்க்: அமெரிக்காவில் மருத்துவ மையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி உள்ளார். 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். அமெரிக்காவின் மிட்டவுன் அட்லாண்டா நகரில் உள்ள நார்த்சைடு மருத்துவ மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட அனைவரும் பெண்கள் ஆவர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்றவர்கள் சிகிச்சைக்காக கிரேடி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த தகவல் அறிந்து, காவல் அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர்.
விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் டீயன் பேட்டர்சன் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் கடலோர காவல் படையின் முன்னாள் அதிகாரி என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அட்லாண்டா காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளின் விசாரணைக்கு கடலோர காவல் படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்த நபரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு தொகையும் போலீசார் அறிவித்து உள்ளனர். அதிபர் பைடன் நிர்வாகமும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியாரே தெரிவித்து உள்ளார்.