பொன்னேரி: பொன்னேரி பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து, பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் மருத்துவமனைக்கு வர தொடங்கியுள்ளனர்.
இதில், நாளுக்கு நாள் அதிகமாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் வரவு அதிகமாக காணப்படுகின்றன. சளி, இருமல், காய்ச்சல், உடல்வலியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் அதிகமான பேருக்கு காய்ச்சல் தொடர்ந்து இருப்பதால், வீட்டில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் மருத்து கடைகளில் மருந்து, மாத்திரை வாங்க கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளிவாயல்சாவடி, வாயலூர் பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு தேவம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மத்தியில், பொன்னேரி அரசு பொது மருத்துவமனை சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் வருகிறது. இந்நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் மொத்தம் 150 படுக்கை வசதியில் 20 படுக்கை வசதி டெங்கு காய்ச்சல் வார்டாக மாற்றப்பட்டுள்ளன.
இதுவரை, டெங்கு காய்ச்சலால் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தாலும், மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும். 5 முதல் 7 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாகவும் இந்த காய்ச்சலுக்கு மருந்து மாத்திரைகைள தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட வேண்டும். ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு, ஏற்படுதல் என, இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவும். மேலும், காய்ச்சல் பாதித்த கிராமங்களில், மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.