கர்நாடக மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற அரிசியாக விளங்குகிறது மைசூர் மல்லி. பழங்காலத்தில் அங்கிருந்த அரசர்கள் இந்த அரிசியை உணவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த அரிசியில் உணவு சமைத்து உண்டால் எளிதில் ஜீரணமாகும். இதனால் மைசூர் மல்லி குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. இன்றளவும் மைசூர் மல்லி அரிசி கொண்டு சமைத்து உணவை குழந்தைகளுக்கு முதல் உணவாக ஊட்டுகிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க மைசூர் மல்லி நெல் ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெறலாம். ஆறு கடலில் சேரும் கழிமுகப் பகுதிகளில் இது மிகுதியாகப் பயிரிடப்பட்டது. காவிரி ஆற்றங்கரையோர கிராமங் களில் இது இரட்டிப்பு மகசூல் தரும் நெற்பயிராக கருதப்படுகிறது. காவிரியாற்றின் கழிமுகப் பகுதிகள் மட்டும் அல்லாமல் கோதாவரி, கிருஷ்ணா போன்ற தென்னிந்திய நதிகளின் கழிமுகங்களிலும் இது பயிரிடப்பட்டது. மேலும், தமிழகத்தில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பல நூறு ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. களிமண், வண்டல்மண், செம்மண் நிலங்களிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட கலப்பு மண் மிகுந்த நிலங்களிலும், மணல் பாங்கான நிலங்களிலும் கூட வளரக்கூடிய மிகச்சிறந்த நெல் இது. 120 முதல் 130 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு ஓரளவு நீர்வளம் இருந்தாலே போதும். பொதுவாக, காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சி வந்தாலே சிறப்பாக வளரும். களிமண் நிலங்களில் சிறிது நீர் விட்டாலே அந்த நீரைக்கூட தேக்கி வைத்துக்கொண்டு வளரும் இயல்புடையது. ஒற்றை நாற்று முறையில் இதை நடவு செய்யலாம்.
ஏக்கருக்கு இரண்டு கிலோ வரை விதைநெல் தேவைப்படும். நடவு செய்வதற்கான வயலைத் தேர்வு செய்வது சமன்படுத்துவதையும் நாற்றங்கால் அமைப்பதையும் ஒரே காலத்தில் செய்ய வேண்டும். நாற்றங்கால் அமைப்பதற்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். விதையை மாலையில் 1 மணி நேரம் காயவைக்க வேண்டும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய, 20 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைத்து விதைக்கலாம். நன்கு தண்ணீர் விட்டு இரண்டு உழவு ஓட்டி சமப்படுத்திய பிறகே விதைக்க வேண்டும். நாற்று வளர்ந்துவந்த பிறகு நடவு செய்யலாம். ஒற்றைநாற்று முறைக்கு வயலைப் பண்படுத்த கோடை உழவு போல இரண்டு முறை நன்கு உழ வேண்டியது அவசியம். பிறகு, பசுந்தாள் உரம் அல்லது நன்கு மட்கிய தொழுஉரம் போட வேண்டும். பசுந்தாள் உரத்துக்கு தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சணப்பு, அகத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு பசுந்தாள் உரத்துக்கான செடிகளின் விதைகளை 15 கிலோ என்ற கணக்கில் தூவிய பிறகு தண்ணீர் விட வேண்டும். இது 25 நாட்களுக்குள் பூத்து விடும். பிறகு நன்கு மடக்கி உழுதால் பசுந்தாள் உரம் மட்கிவிடும். அதன்பிறகு நடவுக்கு முன்பாக ஒருமுறை மறுஉழவு ஓட்டிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
நடும்போது ஏக்கருக்கு 50 கிலோ கடலைப் புண்ணாக்கு மற்றும் 30 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 15 நாளில் இரண்டாவது மேலுரம் போட வேண்டும். தொடர்ந்து 30வது நாளிலும் மேலுரம் போட வேண்டும். நடவு செய்த 25ம் நாள் முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் ஜீவாமிர்தத்தையும் பஞ்சகவ்யாவையும் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். ஆடு தீண்டாத இலைகளான எருக்கு, நொச்சி, வேம்பு, பிரண்டை, சோற்றுக் கற்றாழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு ஏக்கருக்குத் தலா ஒரு கிலோ என எடுத்துக்கொண்டு நன்கு இடித்த பிறகு, இந்தக் கலவையை இரண்டு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் போட்டு ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். இந்தக் கலவை நன்கு நொதித்ததும் நீரை வடிகட்டினால் இயற்கையான பூச்சிகொல்லி தயார். இதை நீரில் கலந்து தெளிக்கலாம். நாற்று நட்ட 15வது நாளில் ஒரு முறையும், 35வது நாளில் ஒருமுறையும் களையெடுப்பு செய்வது நல்லது. மைசூர் மல்லியின் இனிப்புச்சுவை மிகுந்த வைக்கோலை மாடுகள் மிகவும் விரும்பி உண்ணும். மேலும், இதன் வைக்கோல் கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வாரி வழங்கும். மைசூர்மல்லி தற்போது சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் அல்லாது திருவள்ளூர் மாவட்டத்திலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விரைவில் ஜீரணம் ஆகக்கூடிய அரிசி என்பதால் இன்றைக்கும் இதற்கு நல்ல மவுசு இருக்கிறது.
*மைசூர் மல்லி அரிசியில் கஞ்சி வைத்துச் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
*இதன் சோற்றை ஊறவைத்து பழங்கஞ்சியாக்கி கரைத்துக் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் நீங்கும். சருமப் பிரச்சனைகள் கட்டுப்படும்.