சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமச்சிவாய என்று சொல்லக் கூடாது என மிரட்டியதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உண்மைச் சரிபார்ப்பகம் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு.
“மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் கோவில் தெருக்களைச் சுற்றி , எங்கேயும், “ஓம் நமச்சிவாய” என உரக்கக் கூறக்கூடாதாம். அக்கோயிலின், EO மிரட்டல் ” என காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது, இது பதாகையால் வந்த பிரச்சனை ஓம் நமச்சிவாய சொல்வது தொடர்பானதல்ல. கடந்த ஆண்டு நவம்பரில், மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது தொடர்பாக அனுமதியின்றி நடத்திய போராட்டத்தில் பதாகைகள் உடன் கோயிலுக்குள் நுழைய முயன்ற சிலரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொளியை வைத்து ஓம் நமச்சிவாய சொல்லக்கூடாது என்று செயல் அலுவலர் மிரட்டல் விடுத்ததாக வதந்தி பரப்பி விடுகின்றனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.