* தொலைக்காட்சி, நிதி நிறுவனத்திற்கும் சீல் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் சிக்கின
* பினாமி பெயரில் வாங்கிக் குவித்த சொத்துப் பத்திரங்கள் பறிமுதல்
சென்னை: மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த விவகாரத்தில், நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான தேவநாதன் யாதவுக்கு சொந்தமான வீடு, தனியார் தொலைக்காட்சி உட்பட 12 இடங்களில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் நிதி நிறுவனத்திற்கும், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ‘இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக’ நிறுவனரான தேவநாதன் யாதவ் உள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக முதலீட்டு பணத்தின் முதிர்வு பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை பல முறை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட 144 பேர் தங்களது ரூ.24.5 கோடி பணத்தை பெற்று தர கோரி அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி மோசடி நிதி நிறுவனமான மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் யாதவ் நடத்தும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது 409, 420 உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் தலைமறைவாக இருந்த தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜோஸ் தங்கைய்யா தலைமையிலான 4 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு புதுக்கோட்டையில் தேவநாதன் யாதவையும், அவரது கூட்டாளிகளான தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னையிலும் கடந்த 14ம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவிடம் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பதும், நிதி நிறுவனத்தின் 300 கிலோ தங்கமும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
மேலும், சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பாஜ சார்பில் போட்டியிட்டபோது தேவநாதன் யாதவ், பல கோடி ரூபாய் நிதி நிறுவனத்தில் இருந்து ரொக்கமாக எடுத்து தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமை நாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 28ம் தேதி வரை சிறையில் அடைத்தனர். தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது தேவநாதன் யாதவுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள பங்களா வீடு, மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், தேவநாதன் யாதவ் நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் கைதான குணசீலன் வீடு, மகிமை நாதன் வீடு உட்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தேவநாதன் யாதவ் பங்களா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரொக்க பணம், பல கோடி மதிப்புள்ள 2 சொகுசு கார்கள், பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் அவரது அலுவலகம் மற்றும் நிதி நிறுவனத்தில் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், முதலீட்டாளர்களின் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், தேவநாதன் யாதவ் நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து நிதி நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் பரிமாற்றப்பட்ட செய்யப்பட்ட ஆவணங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் நிதி நிறுவன இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோர் வீடுகளில் இருந்தும் முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையின் முடிவில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதன் யாதவ் நடத்தி வந்த தொலைக்காட்சி நிறுவனம், தேவநாதனின் அலுவலகம், மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.
* வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் விசாரணை…
தேவநாதனுக்கு சொந்தமான 12 இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களில் வெளிநாட்டு முதலீடுகள் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் பினாமி பெயரில் தேவநாதன் குவித்துள்ள சொத்துகள், பங்கு சந்தை முதலீடு, பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றி பதுக்கியது ஆகியவை குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மதிப்பீடுகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பிறகு தேவநாதன் யாதவ் எத்தனை கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், வெளிநாட்டு முதலீடுகள் எவ்வளவு, பினாமிகள் பெயரில் அவர் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் ஆகியவை முழுவதுமாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள தேவநாதனின் வலதுகரமாக இயங்கி வந்தவரும், அவரது நெருங்கிய கூட்டாளியுமான சாலமன் மோகன்தாஸை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையே போலீசார் சீல் வைத்ததாக கூறப்படும் தொலைக்காட்சி நிறுவனத்தை இரவோடு இரவாக மயிலாப்பூர் நிதி நிதிநிறுவனத்தின் பின்புற கட்டிடத்திற்கு தேவநாதன் மாற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கும் நேற்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.