* பல கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது, தொழில் பினாமியை பிடிக்க தனிப்படை தீவிரம்
சென்னை: மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட நிர்வாக இயக்குநரான தேவாநாதனுக்குச் சொந்தமான 5 வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள தொழில் கூட்டாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது.
இந்த நிறுவனத்தில் நிரந்தர முதலீட்டர்களின் முதிர்வு தொகை வழங்காமல் கடந்த ஓராண்டுக்கு மேலாக இழுத்து அடித்து வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி மோசடி நிதி நிறுவனமான மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் யாதவ் நடத்தும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதன் யாதவ், கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரது கூட்டாளிகளான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரையும் கடந்த 14ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பிறகு தேவநாதன் யாதவிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மயிலாப்பூர் நிதி நிறுவனம், தேவநாதனின் வீடு, அவர் நடத்தும் தொலைக்காட்சி நிலையம் உட்பட 12 இடங்களில் கடந்த சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை முடிவில் தேவநாதனின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரொக்கப் பணம், பல கோடி மதிப்புள்ள 2 சொகுசு கார்கள், நிதி நிறுவனத்தில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட பல கோடி பணத்திற்கான முக்கிய ஆவணங்கள், பினாமிகள் பெயரில் வாங்கி குவித்து வைத்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஹாட்டிஸ்க் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தேவநாதன் நடத்தி வந்த நிதி நிறுவனம் மற்றும் அவரது தனியார் தொலைக்காட்சிக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்து மூடினர்.
அதேநேரம் தேவநாதன் மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்கள் குவிந்து வருவதால் 7 நாள் காவலில் எடுத்து முடிவு செய்து அதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல நூறு கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக தேவநாதன் நடத்தும் தொலைக்காட்சி வங்கி கணக்கு மற்றும் அவரது பிற வங்கி கணக்குகளுக்கு நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாறப்பட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக தேவநாதனின் 5 முக்கிய வங்கி கணக்குகளை முடக்கி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப கொடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் தேவநாதனுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை கையகப்படுத்த கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இந்த பணிகள் முடிந்ததும், போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து, பொது ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு உரிய பணத்தை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள தேவநாதனின் பினாமியும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகியுமான சாலமன் மோகன்தாஸை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.