சென்னை: சென்னை மயிலாப்பூர் மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, அடிதடி சம்பவங்களில் மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடியான சரத்(எ)வெள்ளை சரத்(26), அவரது நண்பரான யமஹா ராகுல்(24), பிரவீன்(25) ஆகியோர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை அபிராமபுரம் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் 3 ரவுடிகளும் நேற்று இரவு மயிலாப்பூருக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று அதிரடியாக 3 ரவுடிகளையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் வெள்ளை சரத் என்பவர் கொடூரமான குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகே சிறுவன் ஒருவனை கொடூரமாக கொலை செய்த குற்றவாளி ஆவார். பல மாதங்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது 3 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.