சென்னை : மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் தேவநாதன். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக புகார் கூறப்படுகிறது.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் எழுந்தது.
சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.
இந்நிலையில் இன்று மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் தலைவர் தேவநாதனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேவநாதனை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.