சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன பணமோசடி தொடர்பாக தேவநாதன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தலைமை அலுவலகம் மற்றும் கிளை நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தீ மயிலாப்பூர் இந்து பெர்மனண்ட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு பி[போலீசார் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள தேவநாதனின் இல்லம் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அதன் முடிவில் நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களுக்கு சீல் வைத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 27 வாங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் 7 நாள் காவலில் எடுத்த போலீசார் மயிலாப்பூர் நிதி நிறுவன அலுவலகத்திற்கு தேவநாதனை நேரில் அழைத்து சென்று லாக்கர்களை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
3 கிலோ தங்கம் 33 கிலோ வெள்ளி 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். நிதி நிறுவன தலைமை அலுவலகம் பார்க் டவுன், வண்ணாரப்பேட்டை,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய கிளை அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விசாரணை காவல் முடிந்ததை அடுத்து தேவநாதன், குருசீலன், மகிமைநாதன் ஆகிய மூவரையும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.