Tuesday, September 10, 2024
Home » மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி; தேவநாதனின் பல நூறு கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் சேகரிப்பு

மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி; தேவநாதனின் பல நூறு கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் சேகரிப்பு

by MuthuKumar

சென்னை: மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தின் நிரந்தர முதலீட்டாளர்களின் ரூ.525 கோடியை, மோசடி செய்த விவகாரத்தில் நிர்வாக இயக்குநரான தேவநாதன் யாதவுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அவரது சொத்து பட்டியல் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக ‘இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக’ நிறுவனரான தேவநாதன் யாதவ் உள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அந்த பதவியை வகிக்கிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக முதலீட்டு பணத்தின் முதிர்வு பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை பலமுறை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு கடைசியாக பாதிக்கப்பட்ட 144 பேர் தங்களது ரூ.24.5 கோடி பணத்தை பெற்று தரக்கோரி அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின்படி மோசடி நிதி நிறுவனமான மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் தேவநாதன், மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவநாதன் நடத்தும் தொலைக்காட்சியில் பணிபுரியும் நிர்வாகிகளான குணசீலன், மகிமைநாதன் மற்றும் சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது 409, 420 உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கடந்த 12ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையிலான 4 தனிப்படையினர் புதுக்கோட்டையில் தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளான தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகளான குனசீலன், மகிமைநாதன் ஆகியோரை கடந்த 14ம் தேதி கைது செய்தனர்.

தேவநாதன் யாதவிடம் விசாரணை நடத்திய போது, மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் ரூ.525 கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. மேலும், தேவநாதன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிதி நிறுவனத்தின் சொத்துகளை அபகரிக்கும் வகையில் தனது ஆட்களை இயக்குநர்களாக பணியில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதும், சிவகங்கை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட போது தேவநாதன் பல கோடி ரூபாய் நிதி நிறுவனத்தில் இருந்து ரொக்க பணமாக எடுத்து தேர்தல் செலவுக்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும், 150 ஆண்டுகால பழமையான மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதில் ஒரு பகுதியை தேவநாதன், அவர் நடத்தும் தனியார் தொலைக்காட்சி அலுவலகமாக மாற்றிக்கொண்டார். நிதி நிறுவனத்தின் சொத்துகளின் வருமானத்தையும் அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் சிலர், நிதிநிறுவனத்தின் கட்டிடத்தின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தங்க கட்டிகள் தேவநாதன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றதாகவும், பிறகு எந்த தகவலும் அவர் நிதி நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் கூட தெரிவிக்கவில்லை என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர்.

அதன்படிதான் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேவநாதனிடம் 300 கிலோ தங்கம் குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காததால், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.அதேநேரம் நிதி நிறுவன மோசடி சட்ட விதிகளின்படி, மோசடியில் ஈடுபட்ட நபர்களின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது வழக்கம். அதன்படி தேவநாதன் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அவரது சொத்து குறித்து பட்டியலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரிப்பு வருகின்றனர். குறிப்பாக, நிதி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பதவியேற்ற 2017ம் ஆண்டுக்கு பிறகு அவர் வாங்கி குவித்த சொத்துகள், முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்து முழுவதும் கணக்கில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.50 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை தேவநாதன் வாங்கி உள்ளார். அந்த கார் யார் பெயரில் வாங்கப்பட்டது. அதற்கான பணம் எங்கிருந்து வந்தது எனவும், தி.நகரில் அவர் கட்டியுள்ள பங்களா வீட்டின் மதிப்பு குறித்தும் விசாரிக்கின்றனர். தமிழகத்தில் பொதுமக்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த ஆருத்ரா, ஹிஜாவுத், ஆம்ரோ அசோசியேஷன், சாய் எண்டர்பிரைஸ், எல்.என்.எஸ் நிதி நிறுவனம் பட்டியலில் மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனமும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த ஆருத்ரா, ஹிஜாவுத், ஆம்ரோ அசோசியேஷன், சாய் எண்டர்பிரைஸ், எல்.என்.எஸ் நிதி நிறுவனம் பட்டியலில் மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.

You may also like

Leave a Comment

four − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi