அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பிரசாரத்திற்கு வரும் மோடியுடன் இணைந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 20ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. இந்த சூழலில் வரும் 30ம் தேதி அன்று மிசோரம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா கூறுகையில், ‘மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம். அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும். காங்கிரசுக்கு எதிரானது எங்கள் கட்சி. அதனால் தேசியஜனநாயக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் மிசோரம் மாநிலத்தில் அவர்கள் தலைமையில் இணைந்து செயல்பட விரும்பவில்லை. மியான்மர், பங்களாதேஷ் மற்றும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததில், மிசோரம் அரசு ஒன்றிய அரசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறது. நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறோம்’ என்று அவர் கூறினார்.