காளையார்கோவில்: எடப்பாடி பிரதமர் வேட்பாளரா? என்ற கேள்விக்கு ‘அந்த சொல்லை கேட்டாலே தலை சுற்றுகிறது’ என்று ஓபிஎஸ் கிண்டலடித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 222வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காளையார்கோவில் கிராம மக்களால் ராஜகோபுர வாசலில் இருந்து 222 பால்குடம் எடுத்தல், அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் மருதுபாண்டியர் வேடமிட்டு சிறியவர்கள், பெரியவர்கள் என சாரட் வண்டியில் முன் செல்ல, தொடர்ந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து அவரது நினைவிடம் நோக்கி சென்றனர்.
அங்கு மருதுபாண்டியர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து திமுக சார்பில் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தேசிய குழு உறுப்பினர் ஜெய்சங்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜ சார்பில் கருப்பு முருகானந்தம், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், பலர் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மருதுபாண்டியர்களின் வீரம், விவேகம் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும்’’ என்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை நக்கலாக சிரித்தாரே? என்று ஓபிஎஸ்சிடம் எழுப்பிய கேள்விக்கு, ‘‘அந்த சொல்லை கேட்டாலே தலை சுற்றுகிறது’’ என்று கூறிவிட்டு சென்றார்.
* தினமும் அவதூறு குண்டை வீசியதால் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் சீமான் நக்கல்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னை உருவாகியிருக்காது. ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை ஒன்றிய அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு நக்கலாக சிரித்த அண்ணாமலை, அவரை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி இருந்தால் ரசித்திருப்பார்’’ என்றார்.