Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என் எழுத்தும் ஓவியமும் தனித்தன்மை உடையவை!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு கொலை அல்லது தற்கொலையை தவிர்ப்பதற்காகவே எழுதுகிறேன்” என்கிறார் எழுத்தாளர் வழிப்போக்கன் என்கிற சிவானந்தம். கொதிக்கும் கங்குகளை போல இவர் எழுதும் கவிதைகளும் ஆறாமல் தகித்துக்கொண்டேயிருக்கிறது. எழுத்துக் கலைஞன் என்பதோடு மட்டுமில்லாமல் நெருப்பால் சுட்டெரித்து செய்யும் இவர் செய்யும் ‘பைரோகிராபி’ கலையும் ஆறாத வடுவாக பார்ப்போரை கவரும் கலைப் பொருளாகிறது. தனித்தன்மையான தன் எழுத்துக்கள் குறித்தும், பைரோகிராபி ஆர்ட் குறித்தும் இவரிடம் பேசியபோது...

‘‘படிச்சது 12ம் வகுப்பு வரைதான். சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க முடியல. வழக்கம் போல எல்லா குடும்பங்களிலும் உள்ள கடுமையான சூழல் மற்றும் சிக்கல்களுக்கு இடையேதான் நான் வளர்ந்தேன். கல்லூரி படிப்பு இல்லை என்றாலும் புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் இருந்தது. என் பள்ளியில் உடன் படித்த நண்பரின் அப்பா தன் வீட்டில் சிறிய நூலகம் வைத்திருந்தார். அங்கிருந்துதான் எனக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு மாத இதழ்களில் வெளியாகும் கவிதைகள் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. புத்தகங்கள்தான் என்னுடைய எல்லாமுமாக மாறியது.

அதனாலேயே எனக்கு பெரிய நண்பர்கள் கூட்டம் எல்லாம் இல்லை. இன்று வரை அந்த நிலை தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நூலகம் கூட நான் பொது நூலகம்தான் செல்வேன். காரணம், புத்தகம் காசு கொடுத்து வாங்க முடியாத சூழல். பொது நூலகத்தில்தான் நான் நிறைய புத்தகங்களை வாசித்து இருக்கிறேன். அதனை வீட்டிற்கு கொண்டு வந்து படிப்பேன். அப்படி ஒருமுறை ஒரு புத்தகம் எடுத்து வந்தேன்.

சில காரணங்களால் என்னால் அந்த புத்தகத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. ஆனால் அந்த நூலகத்தில் இருந்து நேரடியாக வந்து என்னிடம் அந்த புத்தகத்தை வாங்கி சென்றார்கள். அதன் பிறகு மறுபடியும் அந்த நூலகத்திற்கு சென்றால் புத்தகங்களை படிக்க கொடுப்பாங்களா என்று அச்சமாக இருந்தது. அதனால் பணத்தை சேமித்து புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். அப்படி நான் முதன் முதலில் வாங்கிய புத்தகம் பழனி பாரதி அவர்களின் ‘காதலின் பின்கதவு’ என்ற கவிதைத் தொகுப்பு’’ என்றவர் இன்று தன் வீட்டிலேயே சிறிய அளவில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.

‘‘எனக்கு நண்பர்கள் கிடையாது. உடன் பிறந்தவர்கள் ஆறு பேர் இருந்தாலும் எங்களுக்குள் பெரிய அளவில் உரையாடல் இருக்காது. மனதில் உள்ளதை பகிரவோ பேசவோ யாரும் இல்லை என்பதால், என் மனநிலையை நான் டைரியில் கவிதையா எழுதத் தொடங்கினேன். அதை பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த என் நண்பர் படித்து பார்த்து விட்டு, கவிதை நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்கம் கொடுத்தார். என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் எளிமையான மனிதர்களை பற்றியதாகத்தான் இருக்கும். நான் தனிமையில் இருப்பது போல் நான் செல்லும் இடங்களும் அப்படிப்பட்டதாக தான் இருக்கும்.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத குன்றுகள், கடற்கரைகள், வயல்வெளிகள் போன்ற இடங்களுக்கு சென்றுதான் கவிதைகளை எழுதுவேன். என்னுடைய வலி வார்த்தைகளாக வெளி வரும் போது, மற்றவர்களுக்கு புலம்பலாக தெரியும். அந்த மொழிதான் என் வலியை ஆற்றும் மருந்தாக பார்க்கிறேன். கவிதையும் மிகப்பழமையான கலை. கவிதைகளுக்கு எந்த ஒரு சட்டதிட்டங்களும் கிடையாது. நாடோடி தன்மை கொண்டது. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை படுத்த முடியாது. ஒவ்வொருவரின் உணர்வுக்கு ஏற்ப அதன் பரிணாமங்கள் மாறுபடும்’’ என்றவர், பைரோகிராபிக்குள் தன்னை இணைத்தது குறித்து பேசத் துவங்கினார்.

‘‘அடிப்படையில் நான் ஓவியன். வரைப்படங்கள் வழியாக ஒரு விஷயத்தைச் சித்தரிப்பதை விட எழுத்தின் வழியாகச் சித்தரிப்பது எனக்கு எளிதாக இருந்தது. அதனாலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினேன். என் பெரும்பாலான கவிதைகள் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டும். மேலும் சமூக அவலத்தின் மீதான கோபத்தையும் இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன். மக்கள் பிரச்னைகளைக் கவிதைகளின் வழியாகப் பேசுகிறேன். அதனை தொகுப்பாக வெளியிட்டேன்.

ஒரு கவிஞனாக, புகைப்படக் கலைஞனாக, ஓவியனாக, டிசைனராக... பத்து விரல்களுக்கும் வேலைகள் தெரிந்தவனாக என்னை மாற்றியது பசியும் தனிமையும்தான். எதையும் வித்தியாசமாக செய்வதில் ஆர்வமுண்டு. அதுதான் என்னை பைரோகிராபி பக்கம் இழுத்து சென்றது. அதை நான் முறையாக கற்கவில்லை.

என்னுடைய அனுபவத்தால் படிப்படியாக இதனை தெரிந்து ெகாண்டேன். பைரோகிராபி ஆர்ட், மரத்தை தீயினால் சுட்டு அதில் ஓவியம் வரைவது. மரத்தை தீயினால் சுடும் போது அது கருப்பாக மாறும். அதைக் கொண்டு தான் இந்தக் கலைப் பொருட்களை உருவாக்குகிறேன். பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இந்த ஓவியம் இருக்கும். மற்ற ஓவியங்கள் வரைவதைவிட இதனை வரைய கூடுதல் கவனமும் உழைப்பும் தேவை.

சின்ன தவறு நடந்தாலும் சரி செய்ய முடியாது. மீண்டும் வேறு மரப்பலகையை இழைத்து முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்த போதுதான் அங்கு இதனை பார்த்தேன். வித்தியாசமாகவும் புதியதாகவும் இருந்ததால், செய்ய விரும்பினேன். இதிலிருக்கும் நுணுக்கங்களை ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். முதலில் தேங்காய் சிரட்டை, உதிரி மரப் பலகை துண்டுகளில் சால்டரின் இயந்திரத்தால் பழகினேன். என்னுடைய பெயர் பலகையை செய்து அதனை முகநூலில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து நண்பர்கள் சிலர் தனக்கும் செய்து தரச்சொல்லி கேட்டார்கள். அப்படித்தான் ஒவ்வொன்றாக செய்ய துவங்கினேன்.

முதலில் வரையப் போகும் ஓவியத்தை டிசைன் செய்ய வேண்டும். அடுத்து ஓவியத்தின் அளவிற்கு ஏற்ப மரத்துண்டுகளை வெட்டி எடுக்க வேண்டும். அதன் பிறகு வரையப்பட்ட டிசனை மரத்துண்டில் வரைந்து தேவையான இடங்களில் தீயால் வாட்டுவேன். மற்ற இடங்களில் செதுக்கிவிடுவேன். இறுதியில் பார்க்கும் போது, மரத்துண்டினை எரித்து ஓவியம் வரைந்தது போல் இருக்கும். இந்த ஓவியத்தை கண்களால் பார்ப்பதை விட கைகளால் தொட்டு உணரும் போதுதான் அதில் உள்ள வேலைப்பாடுகளை புரிந்து ெகாள்ள முடியும்.

ஒருமுறை நண்பர் ஒருவர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஓவியத்தை பைரோகிராபியில் செய்து தரச் சொல்லி கேட்டிருந்தார். நானும் செய்து கொடுத்தேன். அதை அவரின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அதை தன் கரங்களால் தொட்டு உணர்ந்தவர் ஓவியத்தில் தன் கையெழுத்தினை போட்டுக் கொடுத்தார். அவரின் கையெழுத்தையும் நான் பைரோகிராபி செய்து கொடுத்தேன். நாம் செய்யும் விஷயம் சிறியதாக இருந்தாலும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். அதனால்தான் இதை தேர்வு செய்தேன். காலம் அனுமதிக்கும் வரை என் எழுத்தும் கலைக்கான தேடல்களும் ஓயாது’’ என்றார் சிவானந்தம்.

தொகுப்பு: மா.வினோத்குமார்