நன்றி குங்குமம் தோழி
‘‘ஒருவரின் ஆரோக்கியம் அவரின் தலைமுடி மற்றும் சருமத்தில்தான் தெரியும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான பொருட்களைதான் நாங்க கொடுக்க விரும்பினோம்’’ என்று பேசத் துவங்கினார் ரிஷப். இவர் ‘யூனிக் ப்ரோ சயின்ஸ்’ என்ற பெயரில் சருமம், தலைமுடி மற்றும் பர்சனல் கேர் ெபாருட்களை அறிமுகம் செய்துள்ளார். இது போன்ற பல பொருட்கள் மார்க்கெட்டில் இருந்தாலும் இவரின் பொருளில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று அவரே அதற்கான விளக்கம் கொடுத்தார்.
‘‘நான் இந்தப் பொருட்களை அறிமுகம் செய்ய முக்கிய காரணம் இந்திய மக்களுக்கு புதுசாகவும் அதே சமயம் அவர்களின் அழகினை பாதுகாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதன் மூலம் மக்கள் அன்றாடம் சந்திக்கக்கூடிய சருமம், தலைமுடி சார்ந்த பிரச்ைனகளுக்கு ஒரு தீர்வு அளிக்க திட்டமிட்டேன். பர்சனல் கேர் பொருட்கள் மார்க்கெட்டில் பல உள்ளன. அவற்றில் இல்லாத சிறப்பினை இதில் அளிக்க விரும்பினேன்.
அதற்காக பல மாதங்கள் ஆய்வில் ஈடுபட்டேன். அதன் அடிப்படையில் ஜாப்பனீஸ் கமீலியா மற்றும் காக்கடு பிளம் பழங்கள் சருமம், தலைமுடி மற்றும் பர்சனல் கேர் பிரச்னைக்கு நல்ல தீர்வு அளிப்பதாக கண்டறிந்தேன். அதைக் கொண்டு என்னுடைய பொருட்களை தயாரிக்க திட்டமிட்டேன். எது முக்கிய மூலப்பொருள் என்று கண்டறிந்துவிட்டோம். ஆனால் அதனுடன் மற்ற எந்த பொருட்களை சேர்த்தால் நல்ல ரிசல்ட் வரும்னு மறுபடியும் ஆய்வில் ஈடுபட்டோம். அப்படித்தான் எங்களின் ஒவ்வொரு பொருட்களையும் நாங்க தயாரிக்க ஆரம்பித்தோம். இப்போது எங்களின் அனைத்துப் பொருட்களும் மார்க்ெகட்டில் உள்ளது’’ என்ற ரிஷப் அவரின் மூலப் பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து விவரித்தார்.
‘‘எங்களின் பொருட்களில் ஜாப்பனீஸ் கமீலியா மற்றும் காக்கடுதான் முக்கிய மூலப் பொருள். இதில் கமீலியா என்பது ஒரு வகையான பூ. பார்ப்பதற்கு ரோஜா மலர் போல இருக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். மேலும் ஊட்டச் சத்து அளிக்கும். சிலருக்கு தலைமுடியில் பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அந்தப் பிரச்னைக்கும் நல்ல தீர்வு கொடுக்கும்.
இந்த எண்ணையை நேரடியாக தலையில் தேய்த்துக் கொள்ள முடியாது என்பதால், அதனை பயன்படுத்தி ஷாம்புக்களை தயாரிக்கிறோம். பொதுவாக ஷாம்புகளை பயன்படுத்தும் போது அதில் இருந்து நுரை வரும். ஆனால் எங்களின் ஷாம்புவில் நுரை வராது. நுரை வர சில ரசாயனங்களை கலப்பார்கள். நாங்க எந்தவித ரசாயனமும் பயன்படுத்துவதில்லை. காக்கடு பிளமில் சருமத்திற்கு தேவையான விட்டமின் சி அதிகம் உள்ளது.
சருமத்திற்கு தேவையான விட்டமின் சி கிடைக்க நாம் சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். அதை நம்மில் பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடியில் உள்ள விட்டமின் சி சத்தை விட இந்தப் பழத்தில் அதிகம் உள்ளது. அது சருமத்திற்கு பளபளப்பினை கொடுக்கும். இந்த இரண்டு மூலப் பொருளின் குணாதிசயத்தை கண்டறியதான் எங்களுக்கு பல மாதங்கள் ஆய்வு தேவைப்பட்டது.
எங்களின் பொருட்களை முதலில் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொடுக்கவில்லை. நாங்க பயன்படுத்தி பார்த்தோம். நிறை குறைகளை சரி செய்தோம். எல்லா ஆய்வுக்குப் பிறகு 2022ல் ஷாம்பு, பாடி லோஷன், லிப் பாம், ஃபேஸ் ஸ்கிரபர், பாடி வாஷ் என எட்டு விதமான பொருட்களை அறிமுகம் செய்தோம்’’ என்றவர் தன் பொருட்களின் மார்க்கெட் நிலவரம் அறிந்த பிறகுதான் அதனை மக்கள் மத்தியில் விற்பனை செய்துள்ளார்.
‘‘இது போன்ற பொருட்களுக்கு முதலில் வாடிக்ைகயாளர்களின் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும். ஒருமுறை வாங்குபவர்களை மீண்டும் மீண்டும் வாங்க வைக்கணும். அதற்கு நம்முடைய பொருள் தரமானதாக இருக்கணும். வாடிக்கையாளர்களின் எண்ணத்தை கணிக்கவே முடியாது. காரணம், இன்று ஒரு பொருள் டிரெண்டிங்காக இருக்கும். அதை வாங்குவார்கள். ஆறு மாதம் வேறு பொருள் பிரபலமாகும். உடனே அதற்கு மாறுவார்கள். அப்படி இல்லாமல் நிரந்தரமாக நம்முடைய பொருளை வாங்க வைக்க வேண்டும்.
அதனால் முதலில் ஒன்றிரண்டு பொருட்களைதான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தோம். அதில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மற்ற பொருட்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். எங்களின் டார்கெட் ஆடியன்ஸ் 18 முதல் 35 வயதுள்ளவர்கள். காரணம், இவர்கள் ஒரு பொருளை வாங்கி அது திருப்தியாக இருந்தால், அதன் பிறகு வேறு பொருளுக்கு மாறமாட்டார்கள்’’ என்றவர், முழுக்க முழுக்க தங்களின் நிறுவன இணையம் மற்றும் ஆன்லைன் விற்பனை தளத்தில்தான் தன் பொருட்களை விற்பனை செய்கிறார்.
‘‘எனக்கும் அழகுக்கலை துறைக்கும் சம்பந்தமே கிடையாது. எங்களின் குடும்பமும் பிசினஸ் குடும்பம். பலதரப்பட்ட பிசினஸ் செய்து வருகிறோம். நான் அதில் தனித்து இருக்க விரும்பினேன். முதலில் டிஜிட்டல் மார்க்கெட் துறையில்தான் வேலை பார்த்து வந்தேன். 2014ல் ஈ-காமர்ஸ் நிறுவனம் ஒன்றை துவங்கினேன். அதன் பிறகு 2020ல் நானும் என் தம்பியும் இணைந்துதான் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சோம்.
நான் ஏற்கனவே ஈ-காமர்ஸ் துறையில் இருந்ததால், ஒரு பொருளை டிஜிட்டல் முறையில் மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருந்தது. நான் அழகுக்கலை பிசினஸ் செய்வேனு நினைச்சுப் பார்க்கல. கோவிட்தான் நான் இந்த துறைக்கு வரக் காரணம். அந்த தாக்கத்திற்குப் பிறகு மக்கள் எல்லோரும் ஆரோக்கியமான விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். அதனை நாங்க பயன்படுத்திக் கொண்டோம். தரமான பொருட்களை கொடுத்தால் கண்டிப்பாக மக்களிடம் நல்ல
வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சோம். எங்களை மக்கள் கைவிடவில்லை.
எங்களின் ெபாருட்களில் என்ன சேர்க்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது. அதற்கான தனிப்பட்ட ஆய்வாளர் குழுவினை நியமித்திருக்கிறோம். அவர்களின் ஆலோசனை மற்றும் ஆய்வின் பேரில்தான் ஒவ்வொரு பொருளும் தயாரானது. புதிய பொருளுக்கு முதலில் பெரிய வரவேற்பு இருக்காது. அதே சமயம் தரமாக இருந்ததால் ஐந்தில் இருந்து ஆயிரமாக என் வாடிக்கையாளர்கள் மாறிஉள்ளனர். இந்த எட்டு பொருட்களைத் தொடர்ந்து சரும சீரம், ஹேர் வேக்ஸ் என மற்ற பொருட்களை படிப்படியாக அறிமுகம் செய்ய இருக்கிறேன்’’ என்றார் ரிஷப்.
தொகுப்பு: ஷன்மதி